Showing posts with label Personal. Show all posts
Showing posts with label Personal. Show all posts

Saturday, 29 March 2014

1983-88
----------
Hostel திருவிளையாடல்
----------------------------------
ஸ்டவ் திரி சிறிது மொத்தமாக இருக்கும், அதில் தீ பொறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து தீயை அணைத்தால், கங்கு அணையாமல் இருக்கும், அதன் சாம்பல் விழுவதற்கு நிரம்ப நேரமாகும்.
--------------------------------------------------------------------------------------
வார்டன் ஒதுக்கிய அறை எண் 63-ல் நுழைந்தால் இன்றைய செசென்ஸ் கோர்ட் நீதிபதி  முருகேசன், அண்ணாமலை யுனிவெர்சிட்டி பௌதீக இயல் துறை DR. சலீம், அன்றைய என் அறை நண்பர்கள்.

அறை 63-க்கு இடதுபுறம் இரண்டாவது, மூன்றாவது தளத்துக்கான படிகள், வரிசையாக திறந்தவெளி ரெஸ்ட்ரூம்கள், பிறகு அறை எண் 1-ன் வலதுபுற சுவர்.மாடிப் படிகளின் கீழ் EB மீட்டர் மற்றும் வரிசையாக மூன்று தளங்களின் மெயின் சுவிட்சுகள்.

நல்ல வேளையாக முதல் தளத்திலேயே அறை கிடைத்ததில் மகிழ்ச்சி! அதை தெரிவிக்கும் போதே, இருவரும் ரொம்ப சந்தோஷப் படாதே! இரவு வேளையில் நம்முடைய சீனியர்கள் மேல் தளங்களுக்குப் போகும் முன் நம் அறைக்  கதவைத் தட்டி திருடன் போலீஸ் விளையாடுவார்கள். ரெஸ்ட்ரூம்க்கு வரும் மற்ற நண்பர்கள் பேஸ்ட், சோப்பு ஓசிக் கேட்பார்கள். எல்லாவற்றையும் விட கதவைத் தட்டி, தட்டி ரொம்ப ரகளை பண்ணுவார்கள் என புலம்ப ஆரம்பித்தனர்.

--------------------------------------------------------------------------------------
லுங்கி உடுத்தும் சூழல் கிடைத்தும் லோக்கல் கார்டியன் பாலு மாமாவின் கண்டிப்பான உத்தரவின் பேரில் வேஷ்டி, வெள்ளை கை வைத்த பனியன் தான் போட வேண்டி இருந்தது.
--------------------------------------------------------------------------------------
இரவு முழுவதும் புதிய சூழல் மற்றும் மேல் தளத்திற்கு இரண்டாம் காட்சி பார்த்துவிட்டுப் போகும் நண்பர்கள் அந்த நேரத்திலும் மகிழ்ச்சியுடன் கதவைத் தட்டி விளையாடிச் சென்றதன் காரணமாக சிறிதும் தூங்க முடியவில்லை. பத்து, பதினைந்து நாள் இப்படியே கழிந்தது. முருகேசன், சலீம் புலம்புவதின் அர்த்தம் முழுவதுமாக புரிந்தது.

அன்று ஞாயிறு காலை எங்களுடைய வெஜ்.மெஸ்ஸில்  பிரட்&குருமாதான் காலை உணவு.
முருகேஷ்! நாம் அப்படியே வெளியே சென்று சாப்பிட்டு விட்டு எனக்கு கொஞ்சம் ஸ்டவ் திரி வாங்க வேண்டும் என்று சொல்ல
என்ன மச்சி? சாப்பிடப் போகலாம், ஆனால் எதற்குத் திரி வாங்க வேண்டும்?!.
நீ முதல்ல கிளம்பு, சாப்பிட்டுக் கொண்டே உனக்கு சொல்கிறேன்.
அப்படியே நடந்து போய் திரி வாங்கிய போது, முருகேஷ் இதுதான் என் ஐடியா, நீ சலீமை மட்டும் கரெக்ட் செய்துவிடு.
--------------------------------------------------------------------------------------
பயந்தால் நிம்மதி போய்விடும். பயப்படுபவர்கள் எதற்காக பயப்படுகிறார்கள் என்று வெளியே சொல்வதில்லை.
--------------------------------------------------------------------------------------
சலீம் இவன் சொல்வது  நல்லத் திட்டமாகத் தெரிகிறது, என்ன சொல்கிறாய் என முருகேஷ் கேட்க,அதற்கு சலீம், டேய்!  வேணாண்டா! மாட்டிகொண்டால் பின்னிவிடுவார்கள்.
நான், சலீம் இங்க பாரு, நீ நிம்மதியாக தூங்க வேண்டுமா? இல்லையா? நம்மை யாராவது பார்த்துவிட்டால் கூட ஒன்றுமே நடக்காதது மாதிரி போய்விடுவார்கள்.

சலீம் திட்டத்துக்கு ஒத்துக்கொண்டு விட, சலீம் எங்களது அறைக்குள் தாழ் போடாமல் கதவின் பின்னால் ஒரு ஸ்டூல் வைத்து விட்டு நாங்கள் குரல் கொடுத்தவுடன், கதவைத் திறந்து பிறகு தாழிட வேண்டும்.

முருகேஷ் நான் சைகை செய்தவுடன் எல்லா மெயின்  சுவிட்ச்களையும் அணைத்துவிட வேண்டும். திரும்பவும் போட்டுவிட்டு அறைக்குள் என்னோடு நுழைந்து விட வேண்டும்.

சீனியர்கள் இரண்டாம் காட்சி முடிந்து, பேருந்து கிடைக்காமல் நடந்தே வந்து, அயற்சியாக மாடிப் படி ஏற ஆரம்பித்தனர். நான் என்னுடைய கழுத்தில் கம்பளி ஒன்றை சுற்றிக் கொண்டு, வெள்ளை வேட்டி, பனியனுடன், திரியை கங்குடன் வைத்துக் கொண்டு மூச்சைப் பிடித்துகொண்டு ரெஸ்ட்ரூம் தூணிற்குப் பின்னால் நிற்கிறேன்.

சிறிது சிறிதாக நண்பர்கள் மெல்ல மெல்ல மேலே ஏறிவர, அவர்கள் எப்போதும்போல் கதவைத் தட்ட,முருகேஷ் விளக்கை அணைக்க, நான் திரியை ரஜினி சிகரெட் முழுங்குவது போல் வாய்க்குள் கொண்டுபோய், பற்களால் திரியை மெட்டிக் கொண்டு, வாயைத் திறக்காமல் ஒரு ஓலமிட, என்னுடைய பற்களின் இடைவெளியில் தீயின் ஜ்வாலை சிகப்பாக ஒளிர, அவர்கள் என்னைக் கொள்ளிவாய்ப் பிசாசு என்று நினைத்துக் கொண்டு ஓட, நான் விரட்ட, அவர்கள் உயிர்மேல் உள்ள ஆசையில் திரும்பிப் பார்க்காமல் ஓடினர்.

நான் கொஞ்சம் விரட்டிவிட்டு முருகேஷ்-ஐ கூப்பிட, அவன் விளக்குகளை திரும்பப் போட்டுவிட்டு, இருவரும் எங்கள் அறைக்குள் நுழைய, சலீம் தாளிட சிரித்துக்கொண்டும், பாராட்டிகொண்டும், அன்று முழுவதும் நாங்கள் உறங்கவே இல்லை.

பயந்து ஓடியதில் அவர்கள் மின் விளக்குகள் அணைந்து திரும்ப எரிந்ததை அவர்கள் உணரவே இல்லை. அவர்கள் முதல் தளத்தில் கொள்ளிவாய் பிசாசு இருப்பதாகவே நம்பினர்.
-----------------------------------------------------------------------------------------------------------
நம்பிக்கையில் தானே வாழ்க்கையே இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------

அந்த 5 வருடமும் முதல் தளம் எங்கள் மூவரின் கண்ட்ரோல்-லில் தான் இருந்தது.




Wednesday, 4 December 2013

11.08.2013

2 அதிசயம் ஆனால் உண்மை!
எனது மகன் இந்த பருவத்திற்கே உடைய வேகமும் விருப்பங்களும் உடையவன்! புத்தகங்கள் என்றால் Clive Cussler, Dan Brown, Restaurant என்றால் New Yarker, Don Pepe, மியூசிக் என்றால் Back Street Boys, Taylor Swift, டிவி நிகழ்ச்சிகள்  என்றால் Bare Grills, Les Straud,CQB கல்லூரி போக மற்ற நேரங்களில் CART ATTACK-ல் ரேஸ் கார் ஒத்திகை!

என் தந்தை என்னிடம் மெதுவாகப் பொருமுவார், ஏம்பா! இவன் நார்மலாகவே இல்லை! மேலும் நம் தாய்மொழி தமிழில் இவன் எதுவும் செய்வதில்லை என்று . அதற்கு நான் சப்பைக்கட்டு கட்டுவேன், வெய்ட் பண்ணலாம்பா! எல்லாம் மாறிவிடும்.

அதிசயம் No.1.  கடந்த சில தினங்களாக Bombay Kannan-ன் ஒலிச் சித்திரமான கல்கியின் "பொன்னியின் செல்வன்" கேட்க ஆரம்பித்திருக்கிறான்.வீட்டில் பொன்னியின் செல்வன் சம்பந்தமாக கலந்துரையாடல், அவனுடைய சந்தேகங்களுக்கு பதில் சொல்வது என்று என் மனைவியும் பிஸியாக இருக்கிறாள்.பொன்னியின் செல்வன் புத்தகங்களையும் படிக்க  எடுத்து வைத்துள்ளான்.

இந்தப் புஸ்தகத்தை விலை கொடுத்து வாங்கி நூல் நிலையங்களுக்குத் தந்தால் சரஸ்வதிதேவிக்குப் பூஜை செய்தவாறு ஆகும். லட்சுமிதேவிக்கு நேரில் பூஜை செய்வதில் பயனில்லை. சரஸ்வதியைத் திருப்தி செய்தால் லட்சுமி தேவியின் மனம் உருகும் என்பது சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரிவாக்கு-நிச்சயம் பொய்க்காது!

அதிசயம் No.2. கடந்த மாதம் இவன் தன்னுடைய ஆப்ரிக்க தமிழ் நண்பனுடன் ஈஷா யோகா நிலையத்துக்குச் சென்று 3 நாள் "சத்குருவுடன் யோகா" நிகழ்ச்சியில் கலந்து திரும்பினான்! வந்தவுடன் ஒரே புலம்பல், என்ன டாடி, வெறும் சாம்பார் சாதம், பழங்கள் மட்டுமே கொடுக்கிறார்கள், தயிர் சாதம் தரவேயில்லை! ஆனால் அவனே சற்று நேரம் கழித்து சொன்னான்-அமைதியாக இருப்பதற்கு கற்று கொண்டேன்!

உடனே எனக்கு Actor சரண்யா-வின் புகழ் பெற்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது. எனக்கும் மகிழ்ச்சி! யானை வந்தால் ஏறிக்கொள்ள, சப்பாணி வந்தால் தவழ்ந்து கொள்ள, வாழ்க்கையின் நிதர்சனத்தை என் மகனும்  புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டான் என்று.
08.06.2013

இன்று ஒரு சரித்திர பதிவிற்கு தகுதியான முன்னோட்டமான முக்கியமான நிகழ்வு என்றே சொல்வேன், மேலும் நான் மிகவும் விழிப்புடன் இருந்து மற்ற உறவினர்களின் உணர்வுக் கலவையை உணர முடிந்தது. என்னுடைய மனைவியின் 7 சகோதிரிகளையும் 4 சகோதரர்களையும், இப் பிறவியில் நேரில் உறவாட, ஊடல் கொள்ள முடியாத, என்னுடைய மாமனார் ஸ்ரீமான். சேது ராமஸ்வாமி முதலியார்-ன் 25-வது நினைவு நாளில் சந்திக்க நேர்ந்தது. எல்லோரும் ஒரே இடத்தில் என்னுடைய- நேர் மைத்துனன்-திரு. நமசிவாயம் வீட்டில், பெரிய மைத்துனன் திரு.இராமகிருஷ்ணன், மூதாட்டி மாமியார் செல்லம்மாள் முன்னிலையில் மருமகன்கள் மருமகள்கள் மற்றும் பேரன் பேத்திகள்( சராசரியாக 20 வயது) -களுடன் ஒரு கலவையான உணர்வுகளுடன் எந்த பேதமும் இல்லாமல் நடந்தது. மந்திர ஓசைகளுடன்,மாமனாரின் ஆசிர்வாதத்தை பெற்றுத் தந்து , தாங்கள் எல்லோரும் ஒரே தந்தையின் பிள்ளைகள்தான் என்பதையும், எதையும் தாங்கும் இதயம் கொண்ட என் மைத்துனன் நமசிவாயம், தன் வாழ்க்கை சதுரங்க ஆட்டத்தின் மூலமாக வெற்றிகரமாக நடத்தினான் என்றே நினைக்கிறேன். ( என் மகனின் காதில் "மலை ஏறினாலும் மச்சினன் தயவு வேண்டும், தாய்க்குப்பின் தாய் மாமன் " என்பதை சொல்லத் தவறவில்லை )

என் பெரிய மைத்துனர் ஸ்ரீ.இராம கிருஷ்ணன் (திருமதி. மங்கைஇராம கிருஷ்ணன் எனது தாய் வழிசகோதரி) வயதில் எனது தந்தைக்குச் சமமானவர், கல்வியில் மட்டும் பொறியாளர் இல்லை, வாழ்வியலிலும் கூடத்தான். அர்ஜுனனுக்கு தேரோட்டியான ஸ்ரீ பரந்தாமனைப் போல் எல்லோருடைய தாபங்களையும் அம்புகளைப் போல் மார்பில் ஏந்தினாலும், மிக நுணுக்கமான தன்னுடைய வசீகரத்தால் ஒருங்கிணைத்தது ஒரு மாயம். அதற்குப் பின்னால் இருக்கும் வலிகளையும், அவமானங்களையும், சமாதானம் செய்து கொண்ட விதம் எனக்கு ஒரு படிப்பினை. தன் இரு குழந்தைகளையும் USA -வில் பொருள் தேடியது போதும், தன்னுடன் இருப்பதே அவர்கள் கடமை என்று சொல்லக் கூடிய வலிமை படைத்தவரின், பிரார்த்தனைகள் "நான் உங்களுக்குப் பதிலாக வந்துவிட்டேன்" என்று என் தெய்வத்திரு மாமனாருக்கு உணர்த்தியிருக்கும் என்று நம்புகிறேன்.

உச்சகட்டமாக இத்தனைபேரும் கோவை, புலியகுளம் Cheshire Homes மன நிலை குன்றிய முதியவர்களுக்கான வாழ்விடத்திற்கு சென்று மதிய உணவு வழங்கி வாழ்வின் நிதர்சனத்தை புரிந்துகொண்டோம். ஒரு கூடுதல் தகவல் Mr. Cheshire ஹிரோஷிமா-வை குண்டு வீசி தாக்கியவர், அதற்கு பிராயச்சித்தமாக அவர் குடும்பத்தினர் உலகின் பல்வேறு நாடுகளில் ஸ்தாபித்து இருக்கும் (ஒரு கிளை நிறுவனம்) Cheshire Homes. மனநலம் குன்றிய ( ? ) திரு. ராஜா, சுமார் 60 வயது முதியவர் அநேகமாக எல்லோரையும் ஒவ்வொருவரின் பெயரையும் கேட்டு வரவேற்றது என் மனதை தடுமாற வைத்தது. இரும்பு பெண்மணிகளான என் மனைவியும்,முதல் பெண் நண்பருமான திருமதி. விஜயலக்ஷ்மியும், சகோதரி திருமதி. மதுமதி நமசிவாயம்-ம் சற்றே கலங்கி போனார்கள்.Cheshire Homes-ல் எங்களுக்கு நன்றி சொன்ன போது நாம் அனைவரும் மனநலம் குன்றியவர்களாகவே இருப்பது போல் உணர்ந்தேன்.

திரும்ப வீட்டிற்கு வந்து மதிய உணவு அருந்தி, விடைபெறும்போது என் அன்பின் மருமகள் பொறியாளர் உதயராகினி நமசிவாயம் புகைப்படக் கலைஞராக மாறினாள். அவளின் ஆணைக்கு கட்டுப்பட்டு ஒரு பெருமைக்குரிய குடும்பத்துடன் அகலமான புகைப்படம் எடுத்துக்கொண்டு ஒரு திருமண நிகழ்வில் கூடி குளிர்ந்தது போல் உணர்ந்தேன்.

தவமாய் தவமிருந்து,
சுந்தர் (குடும்பத்தார்)