Tuesday, 17 December 2013

சென்னை Traffic

போதுமடா சாமி ! என்று சென்னையை விட்டு விலகி வருடங்கள் பல உருண்டோடினாலும், அதன் பந்தத்தை விட்டு விடாமல், நன்றி மறவாமைக்காக சில சமயங்களில்  வர வேண்டியிருக்கிறது.

இம்முறை "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்று உறவினர்களின் எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு வந்தும்  இங்கு வரவில்லை, அங்கு வரவில்லை என்று ஒரே குற்றக்கணை பாய்வதினால்தான்  இந்த புலம்பல்.

சரியாக எனது தெலுங்கானா நண்பன்  Manu Ramidi-ம், அமாம் சுந்தர்சென்னையில் ஒரு நாளைக்கு ஒரு இடம்தான் செல்ல முடியும் என்று சொல்கிறான்!

திரும்பவும் பட்டிக்காட்டான் பட்டிணத்தை பார்த்தது போல, ஏம்பா! எதுக்குப்பா இவ்வளவு Traffic என்று கேட்கத்தான் தோன்றுகிறது. நான் சென்னையை விட்டு ஓடியதற்கு முதல் காரணமே இதுதான். எங்கு பார்த்தாலும் விண்ணை மறைத்து மேம்பாலங்கள் முடிந்தும், முடிவடையா நிலையிலும் போக்குவரத்தை மேலும் மோசமாக்குகின்றன.எத்தனை பாலம் போட்டாலும், Flying Train விட்டாலும் பெருகிவரும்  Population-தான் அடிப்படைக் காரணம். போகிற போக்கைப் பார்த்தால் தாம்பரத்தில் இருப்பவர்கள் திங்கள் கிழமை, பெரம்பூரில் இருப்பவர்கள் செவ்வாய் கிழமை, கும்மிடிபூண்டியில் இருப்பவர்கள் புதன் கிழமைதான் நகரத்தினுள் வரவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது.

நான் வேண்டுமானால் அடுத்தமுறை திருமலாவிற்கு வருவது போல் முன்பதிவு செய்து விட்டு வருகிறேன்.


சென்னையில் இருப்பவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையான 
Fortress-க்குள் தான் இருக்கின்றனர்.

Monday, 16 December 2013


சீனா அண்ணன் தேசம்-சுபஸ்ரீ மோகன்.


சைனீஸ் Aggression at LOC போலவே உங்களுடைய "சீனா அண்ணன் தேசம்" என்னுடைய தேடுதலுக்கு உட்பட்டு, நான் வாங்கி என் கைகளுக்கு எப்படி வந்து சேர்ந்தது என்று எனக்கு தெரியாது.

என்னுடைய கல்லூரி நாட்களில் நடந்தேறிய, சீனாவின் Diplomatic  பாஷையில் June Fourth Incident என்று அழைக்கப்படும்-1989-ம் வருடம் Tinanmen Square-ல் நடந்த மாணவர் புரட்சியை அவர்கள் அடக்கிய விதம், நேரு காலத்தில் நம் இந்தியாவை ஏமாற்றிய விதம், குங் பூ படங்களில் அவர்கள்  அடித்துக் கொள்ளும் அடிப்படை காரணங்கள், அவர்களுடைய  அந்த Glee சிரிப்பு,எப்போதாவது நண்பர்களுடன் Chinese உணவகங்களில், சுத்த சைவனாகிய நான் அந்த வாசனைகளை பொறுத்துக் கொண்டதும்அவர்களுடைய மர்மமான தற்போதைய பொருளாதாரமும், உலக சந்தைகளில் உந்தி தள்ளப்படும் உணவு வகைகள், குழந்தைகள் பாவிக்கும் விளையாட்டுப் பொருள்களின் தரம் ஆகியவற்றில் உள்ள சந்தேகங்கள், அங்கு தொழிலாளர்கள் நடத்தப்படும் விதமெல்லாம் என்னுடைய மனதில் ஏற்படுத்தியிருந்த ஒரு விதமான அபிப்பிராயத்தை உங்களுடைய எழுத்து, நீங்கள் எடுத்துக்கொண்ட களம், கண்டிப்பாக ஒரு மாற்றத்தை உருவாகியுள்ளது என்றால் அது மிகையில்லை.

எல்லா நாடுகளிலுமே அந்த நாட்டின் அரசியல், அந்த நாட்டு மக்களின் மேல் நமக்கு ஒரு தவறான பரிமாணங்களைத்தான் கொடுக்கிறது.

உங்களுடைய அணுகுதல் ஒரு பயணக் கட்டுரையாக இல்லாமல், வாழ்வியல் சார்ந்ததாக இருப்பதால் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது.

குறிப்பாக உங்களுடைய அப்பார்ட்மெண்ட் தேர்வு, தண்ணீர், மின்சாரம் அவைகளுக்கான Prepaid முறை, ஆயுள் நீண்டவர்களின் வாழ்வு முறை, வீட்டு வேலைக்காரர்களின் அர்ப்பணிப்பு உணர்வு,விடுமுறையை தேர்ந்தெடுக்கும் முறை, திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்ந்து தாய் தந்தையரின் உணர்வுகளுக்கும்  மதிப்பளித்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது, மற்ற  நாட்டினரிடமிருந்து சீனர்களின்  உடல்மொழி வேறுபடுதல்,பூங்காவில் இலவச உந்து வண்டியில் முதியவர்கள் கூட ஏறத் தயங்கும் சுய மரியாதை-சுய உழைப்பு, உங்கள் குழந்தைகளின் பள்ளியை கண்டுபிடிப்பதில் நீங்கள் அடைந்த சிரமம், நீங்கள் சீனர்களின் திருமணத்தில் பரிசளிப்பதில் கடந்த சங்கடம், Ben-ன் தோழமை இவை யாவையும் மிகத் துல்லியமாக அனுபவித்து உணர்ந்து எழுதிஇருக்கிறீர்கள்.

நான் சீனாவை சுற்றுலாவின் மூலமாக தெரிந்து கொள்வதைவிட உங்களுடைய பதிவின் மூலமாக அதிகமாக  அறிந்து கொண்டேன் என்பது நிதர்சனம். உங்களுடைய நேர்த்தியான  பகிர்தல் என்னுடைய பரதேசி வாழ்க்கையை மீண்டும் துவக்கத் தூண்டுகிறது. .நிறைய நண்பர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் தங்கள் வீடு, அலுவலகம் மற்றும் சுற்றுலா தலங்களை தவிர, மற்றவை பற்றி விவரிக்க இயலாததை கண்டிருக்கிறேன்.

சீனர்களுடைய பெளத்த மடாலயங்கள் பற்றி நீங்கள் நேராகப் பார்த்து விரிவாக எழுதினால்,--"ஏழாம் அறிவு" திரைப்படத்தில் முழுமையாக தெரிவிக்கத் தவறிய-போதி தர்மரின்-சீனாவுடனான தொடர்பு பற்றி நீங்கள் எழுதினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

சாதரணமாக ஒரு புத்தகத்தை படித்தவுடன்,நம் மீதான அதன் பாதிப்பை பணிச் சுமை என்ற ஒரு போர்வையில் எழுதாம லும், , இந்தியர்கள் என்றால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நிறைய பாராட்டுவார்கள் என்று நினைத்துக் கொ ண்டால் என்ன செய்வது என்றும் நிறைய முறை எழுத தவறியிருக்கிறேன்.

ஆனால் உங்களுடைய "சீனா அண்ணன் தேசம்" என்னுள் சீனாவைப் பற்றி மேலும் நிறைய படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஒரு விமரிசனமாக பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இனிமையானவர்கள் இனிமையான நோக்கையே உடையவர்கள் என்பதை உங்கள் எழுத்து உணர்த்தியிருக்கிறது.

Shiyu.

Wednesday, 4 December 2013

30.11.2013


05.08.1999 கொல்கத்தா டெபுட்டேஷன்.

குணத்திலும், உருவத்திலும்,சீனியாரிட்டியிலும் பெரிய நண்பன் சமர் சௌத்திரியின் உதவிக்காக அன்றைய கல்கத்தாவில் இறங்கியவுடன், வாடகை டாக்ஸியில் ராஷ் பிஹாரி அவென்யுவிற்கு பயணம்.மெய் சிலிர்க்க ஹௌரா பிரிட்ஜ், ஈடன் கார்டன் ஸ்டேடியம் , விக்டோரியா மெமோரியல், தக்சிணேஸ்வர் காளிகோயில் கடந்து இடதுபுறம் திரும்பி "அமிதாப் தாபா" தாண்டியவுடன் ராஷ்பிஹாரி அவென்யூ கோமள விலாஸ்-ல் ஹால்ட்.

இன்னொரு மெய்சிலிர்க்கும் அனுபவம், டாக்ஸி டிரைவர் நான்கு ரூபாவை திருப்பிக் கொடுத்தது. கல்கத்தாவில் இருந்தவரை அவர்களிடம் என் வாதாடும் திறமையை காண்பிக்க தேவையே இல்லாமல் இருந்தது. காலை எக்மோர் அல்லது சென்ட்ரல் வந்து, வேளச்சேரி, கார்ட் டிராக் ரோடு-க்கு ஆட்டோ பிடிக்கும் அனுபவத்தை நினைத்தால் சென்ற இடத்திலேயே இருந்து கொள்ளத் தோன்றியது நினைவில் வந்தது.

முதல் நாள் வேலை ரணபீர் கோஸ்வமியுடன்,

Suswagatham Sir!

kya Munache Ranabir?

குசல விசாரிப்புகளைத் தாண்டி, வேலை எங்கே? என்று கேட்டால், ஒரே நாளில் மாணிக்தலா, கக்குர்காச்சி, பார்க் சர்கஸ், கரியா காட் என்கிறான், சாப்! டாக்ஸி எட்டு மணிக்கு வந்துவிடும் என்ற அறிவிப்பு வேறு!  பெங்காலிகளிடம் பேசும்போது நம்முடைய காதுக்கு சிறிது பஞ்சு தேடவேண்டும். லோக்கல் காலையே டிரங்கால் போல மிக எளிதாக பேசுவார்கள். இதற்கு செய்தி வாசிப்பாளர் ஆர்ணாப் கோஸ்வாமியும், போரியா மஜும்தாரும், தீதியும்தான் ஆதாரம்.

என்னதான் AC-ல் இருந்தாலும், குளித்து தலை துவட்டுவதற்குள் மீண்டும் வேர்வையில் குளிக்க வைக்கும் கொல்கத்தா, சென்னையே பரவாயில்லை என்று தோன்றும் அதிகப்படி ஈரப்பதம்,இரவு திரும்பும்போது கழுத்து டை-யின் நுனி முதல் வேர்வை.

அமிதாப் தாபாவில் 2 ருமாலி ரொட்டி அலுமினிய ஃபாயிலில் சுற்றிக்கொண்டு ஒரு "வார்"-ல் பனீர் பட்டர் கோர்மா வாங்கிக் கொண்டு திரும்பினால், கோமள விலாஸ் மாமா, சுந்தர்!போன் என்கிறார்.

எதிர்முனையில் சகதர்மிணி! ஜீ! வருணை DR. அனந்த கிருஷ்ணா-விடம் காண்பித்தேன்! Typhoid Fever என்று confirm செய்துவிட்டாள். ஆனால் வீட்டிலேயே வைத்து Treatment கொடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள், ஆகையால் நானே பார்த்துக் கொள்கிறேன்! You do not worry! Finish your work and come! I will manage.

காலையில் ராஷ்பிஹாரி அவென்யூவின் இரைச்சலுக்கிடையே-நாடார் கையேந்தி பவனில் வாணி ஜெயராமின்" மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடலைக் கேட்டுக்கொண்டு, பொங்கல் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ரணபீர் வந்து" சாப், வருண் இப்போது எப்படி இருக்கிறான் என்று வீட்டுக்கு போன் பண்ணிக் கேட்டீர்களா? என்று கேட்டதற்கு இல்லை ரணபீர்!இரவு வந்து கேட்டுக் கொள்ளலாம்! இல்லை என்றால் சென்னை ஆபீஸ்-ல் இருந்து யாராவது போய் பார்த்துக் கொள்வார்கள் என்று சொன்னதற்கு ஏதோ முணு முணுத்துக் கொண்டே டாக்ஸியில்  ஏறிக்கொண்டான்.

ஒரு வேளை உன்னை நம்பியும் ஒருத்தன் பெண் கொடுத்தானே! என்று சொல்லியிருப்பானோ!

இன்று மாலை ரணபீர் அலைபேசியில் GOOD EBENING Saab! என்று விளித்தபோது,அவனிடம் சொல்லாமல் விட்டது,

 ரணபீர்! அது வேறு காலம்!
20.11.2013


என் Cover Photo-வில் வந்திருக்கும் இந்த "டோனா ரிக்க்ஷா"-க்கள் இல்லாமல் கொல்கத்தா கிடையாது. ட்ராம், ட்டுயுப் ட்ரைன், டாக்ஸி-க்கள் இருந்தாலும் சிக்கனம் மற்றும் வசதி என்று பார்த்தால் இந்த கை ரிக்க்ஷா-டோனா ரிக்க்ஷா-காரர்கள்தான் கொல்கத்தாவை நகர்த்துபவர்கள் என்று சொல்லலாம்.

இந்த கை ரிக்க்ஷா-காரர்களின் ஆகிருதி ஒரு "கோலியாத்" போன்ற உருவம், உழைத்து உழைத்து கடுமையாக சமைத்த தேகக் கட்டு. இவர்களின் உணவு வெறும் கோதுமைக் கஞ்சிதான், கஞ்சி என்றால் வெறுமென கோதுமையை தண்ணீரில் கலந்து அப்படியே ஒரு கிளாஸ், இரண்டு கிளாஸ் என்று குடித்தால் ஒரு உணவு வேலை கடந்தது என்று அர்த்தம். சிறிது ஆடம்பரமான உணவு என்றால் சப்பாத்தி போடுவதற்கு முன் நாம் உருண்டை பிடித்து வைத்திருப்போமே, அதில் ஒரு இரண்டு, மூன்று உருண்டை அவ்வளவுதான். இன்னும் சிறிது கொண்டாட்டம் என்றால் இந்த உருண்டைகளோடு கொஞ்சம் உருளைக் கிழங்கு மசித்து, கொஞ்சம் சிறிய வெங்காயம் சேர்த்து, பச்சை மிளகாயுடன் சாப்பிடுவதுதான் அவர்களுடைய ஸ்டார் ஹோட்டல் விருந்து.

நாள் முழுக்க ரிக்க்ஷா, கோதுமை உருண்டை, நடை பாதை வாழ்க்கை இதுதான் அவர்கள் வாழும் முறை. வம்பு, தும்பு கிடையாது. ஒரு கைலி, ஒரு முண்டா பனியன் இது இவர்களுடைய உடை. மிக கம்பீரமான ஆத்மாக்கள்.

ஒவ்வொரு முறை நான் கொல்கத்தா- பார்க் சர்க்கஸ் செல்லும் போதும் இவர்களுடன் எனது மதியத்தை செலவு செய்திருக்கிறேன். எல்லோருமே பங்களாதேஷ்-ல் இருந்து வந்த அகதிகள், அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தங்கள் வாழ்கை நடத்துவது ஒரு பாடம்.

நான் அவர்களுக்கு வாடிக்கையாளர் என்பதை விட, நண்பன் என்பதே சிறப்பு.

சலாம் கொல்கத்தா!
19.10.2013

அவினாசி நெடுஞ்சாலையில், மிக சுறுசுறுப்பான காலை 9லிருந்து-11மணி வரையிலும் பிறகு மாலை 4-லிருந்து இரவு 8 மணிவரை வாகனங்களின் அணிவகுப்பு, எதோ இன்றே பிரபஞ்சத்தின் கடைசி நாள் என்பது போல் எல்லோரும் விரைகிறார்கள். அதில் சில பேர் அந்த இலக்கை அடைந்ததாக நேரிலும், செய்தியிலும் தெரிந்து கொள்வதுண்டு.

இப்போது சில நாட்களாக ஏதோ கலிங்கத்துப் போரில் வெற்றி கொண்டு வாகை சூடியது போல் JCB, POKELINER, இயந்திரங்கள் மற்றவர்களுடன் எந்த விதமான நேரக் கட்டுப்பாடோ, வேகக்  கட்டுப்பாடோ இல்லாமல், 80- களின் என்னுடைய ஆதர்ச 500cc BIKE  RACER- Kevin Schwantz கூட தோற்கடிக்கப்படும் வேகத்தில், பயமேயில்லாத நெளிவு சுழிவுகளுடன் ஆரவாரமாக செல்லுகிறார்கள்.

சில சமயம் இவர்களுடைய CRANE-கள் JAMES BOND படத்தில் வருவது போல் முன்னால் சென்று கொண்டிருக்கும் கனரக வாகனங்களை கூட அப்படியே தூக்கிச் சென்றுவிடும் போலிருக்கிறது. என்னவென்று கேட்டால் கோவை மாநகரெங்கும் பாதாள சாக்கடைகளுக்கும், குடி தண்ணீருக்குமான குழாய்கள் பதிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்களாம்.

ஏன் இவர்கள் அதிகாலையிலும், போக்குவரத்து ஓய்ந்த பிறகு இவர்களுடைய போக்குவரத்தை வைத்துகொள்ளக் கூடாதா? ஒரு JURASSIC PARK படம் பார்ப்பது போலிருக்கும் மற்ற வாகன ஓட்டுனர்கள் இவர்களுக்கு வழி கொடுத்துஓடி ஒளியும் காட்சி.

எப்போதும் போல் நம் நகரக் காவலர்களும் சேப்பாக்கில்  கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல் வியந்து, அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கோவையில் எல்லோருக்கும் கழுத்து  மற்றும் மூட்டு வலிக்காக எலும்பு மருத்துவர்களிடம் நேரம் ஒதுக்கச் சொல்லவேண்டும். இந்த JCB, POKELINER-ன் இரும்புக் கைகள் யார் தலையிலாவது ஆசிர்வாதம் செய்தால், அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் பாக்யராஜ், ஹாஜா ஷெரிப்-ன் கன்னத்தில் பளார் என்று அறைந்தவுடன், அடுத்த டேக்கில், அம்பிகாவின் கை வளையல்களை திருப்புவதற்காக அடகு வைத்த கடையின் வாசற்படியில் போய்  விழுவதுபோல், நேராக யமலோகம்தான்.யம கிங்கர்களுக்கு travelling allowanceகூட  கிடைக்காது.

சமீபத்தில் சரண் ராம் தன்னுடைய சுவரில் வடபழனியிலிருந்து STERLING ரோட்டில், இருச் சக்கர வாகன ஊர்வலத்தின் போது தான் "மக்கா" என்று அலறியதாக எழுதியிருந்ததை மறக்கமுடியாது. சாலையின் இரு ஓரங்களிலும் இவர்கள் ஒரு யானையின் கால் அளவுள்ள  drilling bit-ல் தோண்டும்போது எந்தவிதமான பாதுகாப்பும் பயணிகளுக்கோ, அல்லது இவர்களுடன் பணி புரிபவர்களுக்கோ கிடையாது. இவர்கள் தோண்டும் குழிகளுள் நாமே நம்முடைய உயர, பருமனுக்கு தகுந்த மாதிரிக்கு பார்த்து படுத்துக்கொள்ள வேண்டியதுதான், மற்றதை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

வளர்ச்சிப் பணி முக்கியம்தான் அனால் எந்தவிதமான முன்னெச்செரிக்கையும் இல்லாமல் செய்யும் பணி ஆபத்தையும், ஒரு விதமான பீதியையும் தான் நமக்கு கொடுக்கின்றன. நாம் இன்னுமொரு 20 அல்லது 30 வருடங்களை எப்படி கழிக்கப் போகிறோம் என்பது ஒரு சவால்.

45 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட, சா.கந்தசாமியின்  இறவாப் புகழ் பெற்ற சாயாவனம் புத்தகம் தான் நினைவிற்கு வருகிறது
Birthday Greetings to Bharathi Mani




24.08.2013

பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரு Intelligent property- ஐ வாழ்த்துவதற்கு வயது எல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறேன். Business, Family, Club, Tour இவைகளைத் தாண்டி எனக்கென்று ஒரு கனவு உலகத்தை உருவாக்கி கொள்ள முடியுமென்ற நம்பிக்கை உங்கள் " பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகம்" எனக்கு கொடுத்தது. நான் தில்லி, நாகர்கோயில் மற்றும் திருவனந்தபுரம் செல்லும்போதும், நாடகங்கள், பஞ்சாபி நண்பர்களை பாவிக்கும் போதும் உங்களின் நினைவு எனக்கு வரத் தவறுவதில்லை. இதற்கு சிகரம் வைத்தமாதிரி என் தந்தை புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர் ஆதலால் ஒரு PIPE-யும் பெங்களூரில் இருந்து வரவழைத்துக் கொடுத்தேன்.ஆகையால் பாரதி மணி சார், என் கூடவே வாழ்ந்து வருகிறார். உங்கள் தொலைபேசி, அலைபேசி எண்கள் கிடைத்தபோதும், உங்களுடன் பேசாமலேயே ஒரு ஏகலைவனாக இருக்கப் பிரியப் படுகிறேன்.என்னை மாதிரி பொருள் தேடி களைத்து வாழ்கையில் அடுத்து என்ன என்று திகைத்து நிற்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக தொடர்ந்து உற்சாகபடுத்துவதற்கு, எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
27.09.2013

அதிகாலை ஸ்ரீதரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு.
என்ன ஸ்ரீ இவ்வளவு காலையிலேயே!
இல்லை sir, நான் நள்ளிரவு 2 மணிக்கே கூப்பிடவேண்டியது,
சொல்லு ஸ்ரீதர் என்னாச்சு?
sir, KVP. ஸ்ரீனிவாசன் போயிட்டான் sir!
சிறிது நேரம் ஆயிற்று , நான் என்னுடைய சுயநிலைக்கு வருவதற்கு.
sir, நினைவிருக்கிறதா? நாங்கள் இருவரும் 20 வருடங்களுக்கு முன் ஒரே நாளில் தான் உங்களுக்கு ரிப்போர்ட் செய்தோம்.
ஆமாம் ஸ்ரீ. ஞாபகம் இருக்கிறது!
ஸ்ரீதர், நான் ஒரு 6 மணிக்கு ரெடியாக இருக்கிறேன். மற்றவர்களிடமும் சொல்லிவிடு!எல்லோரையும் PICK-UP செய்து கொள்ளலாம்.

ஸ்ரீதர் வரும்வரை KVPS-ன் நினைவுதான்.

 KVPS-க்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஹோசூர் வரை Juristiction. நான் KVPS -ஐ அழைத்துக்கொண்டு Launch செய்ய Slide Projector, Product samples, ஒரு வாரத்திற்கான மற்ற ஆயத்தங்களுடன் இட்டாண்டஹள்ளி, ஜிட்டாண்டஹள்ளி எல்லாம் தாண்டி காலை ஹோசூர் போய் நள்ளிரவு கிருஷ்ணகிரி வந்து அத்தனை சுமைகளுடனும் ரூம் போட்டாயிற்று.
அடுத்தநாள் காலை முதல் Appointment-லேயே projector சொதப்ப, அதை மூடவே முடியாத மாதிரிக்கு  KVPS கையில் ஏந்திக்கொள்ள lodge-க்கு ஊர்வலம் கிளம்பினோம்.

இடையில், நான் ஸ்ரீனி நீ  lodge-க்கு போய் பில்  செட்டில் செய்து ரெடியாகு, நான் சின்ன தலைவரிடம் Trunk call புக் பண்ணி சொல்லிவிட்டு,  வேறு  Projector-ஐ
சேலத்தில் கொண்டுவந்து  கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி கிருபாச்சாரியர்.வீரராகவன்-ஐ லைனில் பிடித்தால்
சுந்தர்!வெற்றி செய்தி எதாவது இருந்தால் சீக்கிரம்  சொல்லு! இங்கே எனக்கு சூட்டில்  கொப்புளம் வந்துவிடும் போலிருக்கிறது என்றார். அப்புறம் இங்கே நடந்தவற்றை சொல்லி குளிரப்பண்ணி, அன்றிரவே ஹரி-ஐ சேலம் old Railway ஸ்டேஷன் அருகே எங்களுடைய ஆஸ்தான Raj Bhavan-ல் சென்னயிலிருந்து Projector-ஐ கொண்டுவந்து கொடுக்க ஏற்பாடு செய்து ரூமிற்கு திரும்பினால்   KVPS லாட்ஜ் வாசலில் Projector-ன் மேல் ஒரு வேஷ்டியை போட்டு மூடி ஏதோ போல்  ஏந்திக் கொண்டிருந்தான். என்னடா ஸ்ரீனி என்று கேட்டால், இல்லை அப்படியே கொண்டுபோனால் TTS வேலை தீர்த்துவிடுவார் என்று சொல்ல இருவரும் சேலம் திரும்பிவந்தது மாவீரன்.அலெக்ஸாண்டர் பாபிலோன் வந்ததற்கு இணையானது.

பிறகு மற்றொரு  Projector-டன் கிருஷ்ணகிரி சென்று பேருந்து நிலையத்தின் அழகை கண்டு கழித்து, காலையில் இட்லி, தோசை கிடைக்காமல் பரோட்டா-விற்கு பால் ஊற்றி சாப்பிட்டு, அடுத்த முறை வரும்போது கேனில் தண்ணீர் கொண்டுவரவேண்டும் என்று சங்கல்பத்தை எடுத்துக்கொண்டதும், மறுபடியும்  Projector-ன் built-in screen ரிப்பேராக அதே வேஷ்டியை திரை சீலையாக மாற்றி 15 நாட்களுக்கு ஒப்பேற்றி பிறகு சேலம் திரும்பியது எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனை.

எனக்கு சென்னை உயர்பதவிக்காக மாற்றம் கிடைத்தவுடன் KVPS தன் சேலம் வேலையை விட்டு விட்டு  எங்கோ போய்விட்டான். இரண்டு, மூன்று மாதம்  கழித்து ஒரு நாள் மதியம் ரிஷப்ஷனிஸ்ட் ராஜி,  sir,உங்களுக்கு போன் என்றவுடன் KVPS எதிர்முனையில், ஸ்ரீனி எங்கடா போயிட்ட? என்றால், இல்லை sir, எனக்கு எல்லோரிடமும் வேலை பார்க்க முடியாது என்றான்.

மறுபடியும் ஒரு இரண்டு ஆண்டு கழித்து இரவு வேலை முடிந்து வீடு திரும்பினால் KVPS டிபன் சாப்பிட்டு கொண்டிருக்க, என் இல்லத்தரசி KVPS மறுபடியும் வந்துவிட்டார் என்றாள்! பிறகு கிளம்பும்போது ஸ்ரீனி பணம் ஏதும் வேண்டுமாடா? என்றால் வேலை வாங்கிக் கொடுங்கள் என்றான். துரோனச்சாரியார் பால்கிஷன் சாரிடம் சொல்லி அவருடைய இன்னொரு நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்த சில மாதங்களுக்கு பிறகு அங்கிருந்தும் சில மாதங்களில் எங்கோ போய்விட்டான். மிகவும் நல்லவன்,யாருக்கும் தொந்திரவு கொடுக்காத உத்தமமான ஆத்மா.

மீண்டும் அலைபேசி ஒலிக்க, ஸ்ரீதர் காரோடு வெளியே நின்று கொண்டிருந்தான். sir, KVPS 2 மணிக்கு மாரடைப்பால் காலமாயிட்டான் என்று சொல்ல, நான் "நல்லவனுக்கு அழகு சொல்லாமல், கொள்ளாமல் போவது"  என்று நினைத்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தேன்.

இம்முறை KVPS எங்கு போயிருக்கிறான் என்று தெரியும்!