Thursday, 20 February 2014

என்னடா சுந்தர்? போர் அடித்துவிட்டதா? என என் இளைய சகோதரன் மனோ.

பின்ன 5 மணி நேரம் கோவையிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு பேருந்தில் வருவதென்றால் சும்மாவா?

மீனா வருவதற்கு மாலை 7 மணி ஆகிவிடும், நேரா டிபன் சாப்பிடுவதற்கு வெங்கடேச பவன் போயிடலாமா?

ஆமாம் பயங்கர பசி!

தெற்கு கோபுர வாசலில் வெங்கடேச பவன் வாசலில் இறங்கும்போதே அக்காரவடிசில், சாம்பார் வடை ஸ்பெஷல் என போர்டு கூவியது என் வயிற்றில் கேட்டது.

சுந்தர்! நான் ஆர்டர் பண்ணுகிறேன், டிப்ஸ் எதுவும் கொடுத்துவிடாதே! இங்கு முதலாளிகளே வேலை செய்வார்கள் என மனோ உஷார்பத்திரி செய்தான். இவர்கள் எல்லாம் நமக்கு ஸ்கூல்-ல் சீனியர்கள் நினைவிருக்கிறதா?

இல்லை மனோ!மறந்துவிட்டது.

உனக்கு எதுதான் நினைவிருக்கிறது?

இலைக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தபோது, சமீபத்தில் மொட்டை அடிக்கப்பட்ட என் தலையில் டென்னிஸ் ராக்கெட்டால் ஆசிர்வாதம் செய்யப்பட்டது.திரும்பினால் AR சார் தன் மொட்டைத் தலை திருமண்ணுடன், டென்னிஸ் ராக்கெட்டுடன்  அபய சேவை சார்த்தினார்.

எனக்கு ஒரு ஸ்வீட் கொடுப்பா! என்றவாறே AR, சுந்தர்! பார்த்தாயா? எப்படி மனோ-வை உருவேற்றி வைத்திருக்கிறேன். மாலை 4 மணிக்கு வெங்கடேச பவன், 6 மணிவரை டென்னிஸ், அப்புறம் 8 மணிவரை பிரிட்ஜ்.

சரி சார்!நடக்கட்டும் உங்கள் ராஜ்ஜியம்.

மனோ.இல்லை சுந்தர்! அவர் ஒரு கை சேர்ப்பதற்காக கதைகட்டுகிறார்!

மூவரும் கிளப்-ல் போய் இறங்கியவுடன், சுந்தர்! AR முதலில் கோர்ட்டில் நுழையட்டும், நாம் சிறிது நேரம் கழித்து செல்வோம் என்று மனோ காதை கடித்தான்!

Dr.முரளி, கஸ்தூரி, சுப்ரமணியன் சார் எல்லோரும் AR-ஐ பார்த்தவுடன், வாங்க சார்! இன்றைக்கு என்ன ஸ்பெஷல்? எனக் கலாய்த்தனர்.

வா சுந்தர் உள்ளே போலாம் என்றவாறே, இதுக்குத்தான் சொன்னேன் என்றான் மனோ.

AR, ஹேய் கஸ்தூரி பான் பராக் இருந்தால் கொஞ்சம் கொடேன்!
டாக்டர், AR சார்! நீங்கள்  கிளப்-க்கு வெளியே போய்தான் துப்பணும்! அதுக்குள்ளே நாங்க ஒரு செட் விளையாடி விடுகிறோம் என சைடு வாங்கினார்.

AR, சுதாரித்துக் கொண்டு, இல்ல இல்லப்பா நான் முதலில் ஒரு செட் விளையாடிட்றேன் என களத்தில் இறங்க, கஸ்தூரி AR சார், வேணும்னா பான் பாரக் ஒவ்வொரு கேம்-க்கு வேணும்னாலும் தாரேன் என வம்பிழுக்க,டாக்டர் தன் டென்னிஸ் elbow-க்கு strap செய்துகொள்ள, மனோ, கஸ்தூரி தத்தம் முழங்கால்களுக்கு knee guard போட்டுக்கொள்ள, AR எப்போதும்போல் தன் வெற்றிலை,சீவல், ரங்கா புகயிலை மற்றும் தன் கதாயுதத்துடன்,  மனோ & AR ஒரு டீம், டாக்டர் & கஸ்தூரி ஒரு டீம் என களை கட்டியது.

சுப்ரமணியன் சாரிடம், என்ன சார், இந்த தடவை நீங்கள் மலேசியா போய் இருந்தது எனக்குத் தெரியாது என, ஆமாம் சார்! சங்கருக்கு Acute Deailgnment என புதுவிதமான ஸ்ட்ரெஸ், மாட்டுப்பெண் அந்த சமயம் பார்த்து வேலை விஷயமாக லண்டன் போய்விட்டாள்! நானும் அவனுக்கு சரியானவுடன் உடனே வந்துவிட்டேன் என சொல்லி முடிக்க,

AR, ஏய் கஸ்தூரி! ஏன்டா எனக்கு சர்வீஸ் வின்னர் அடிக்கிறாய் என சலித்துக்கொள்ள, மனோ! உனக்கு Fore hand விளையாடவே தெரியாதா? Back hand போட்டு கொல்லாதே!நானே strap கட்டிக்கொண்டு கொண்டு விளையாடுகிறேன் என்று  டாக்டர் கடிக்க , சுப்ரமணியன் சார், என்ன சார்? மனோ-வை Well taken என்கிறீர்கள், அது உங்களுடைய பந்து  என துவைக்க, score என்ன என்று கேட்டால் 5-5 என்கிறார்கள்.

AR வெளியே வந்து, சுந்தர்! வர்றியா? உனக்காக ஒரு செட் வேணா ஆடுகிறேன் என்றார்.
இல்ல சார் எனக்கு கஷ்டம் என்று சொல்ல, AR நீ எங்க வேணாலும் போய் விளையாடு, ஆனால் நம்ம கிளப் மாதிரி வராது  என சொல்ல,அவனை கேட்காதீர்கள் சார்! கேட்டால் டெல்லி, சோலன் என்று பினாத்துவான் என்று  மனோ AR நெருப்பில் கொஞ்சம் நெய் வார்க்க, நான் பதிலுக்கு நீங்களும்தான் ஒவ்வொரு மார்ச்-ம் குன்னூருக்கு UPASI Bridge tournament-க்கு வந்து தோத்துட்டு, டென்னிஸ் மட்டும் விளையாடிட்டு போகிறீர்கள் என்னை வந்து பார்த்தீர்களா? என ரவுண்டு கட்ட, AR, சுந்தர்! என்ன வேணா சொல்லு, எங்களை மாதிரி நீ ஸ்ரீரங்கத்தில் ஜாகை வாங்கிக் கொண்டு செட்டில் ஆக முடியுமா? எனக் கேட்க, நான் ஸ்ரீ ரெங்கநாதர் நினைக்க வேண்டுமே என துக்கம் தொண்டையை அடைக்கச் சொல்ல, ஒரு 10 நிமிட இடைவெளி.

AR ஆதுரத்துடன் வந்து இன்னைக்கு தியாகராஜர் ஆராதனை உற்சவம்-TM.கிருஷ்ணா கச்சேரி, எல்லோருக்கும் என்னுடைய வீட்டில்தான் தளிகை முக்கியமா ரஸவாங்கி உண்டு என்று சொல்ல, டாக்டர்.முரளி, AR சார்! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சார், இன்றைக்கு அரவணை ஸ்வீட் என்று மட்டும் சொல்லுங்கள், அவன் TM.கிருஷ்ணா-க்கு கார் கதவு கூட திறந்து விடுவான் என்று அவர் பங்குக்கு கொஞ்சம் வாரினார்.

சரியாக ஏழரை மணிக்கு, TM.கிருஷ்ணா-புவி நிடா சுதனே!( எனக்கு சங்கராபரணம் மட்டும்தான் தெரியும்-அதுவும் கொஞ்சம் டவுட்டு)என்று ஆரம்பித்தவுடன், AR, வா வா! உங்களுக்காகத்தான் வெய்ட் செய்து கொண்டிருக்கிறேன்! சாப்பிடலாம் என வலது பக்கத்தில் AR, இடது பக்கத்தில்  சுப்ரமணியன் சார், பக்கத்தில் கோத்ரேஜ் கட்டிலின் மேல் முட்டி மடக்க முடியாத மனோவுடன் ஜுகல்பந்தி சாப்பாட்டுக் கச்சேரி முடிந்தது.

சுந்தர்!நாளைக்கு"விசாகா ஹரி ப்ரோக்ராம், இல்லை சார். அக்காரவடிசில்! இல்லை சார்,டெல்லி கிளம்பறேன், மனோ-க்காக வந்தேன் சார்! அடுத்த மாதம் வருகிறேன்.

எனக்காக ஸ்ரீ ரெங்கநாதரிடம் கொஞ்சம் உத்தரவு கேளுங்கள் சார் என்றேன் AR என்கிற ராமானுஜரிடம், AR-க்கு சிறு வயது, வெறும் 76 தான்.



Sunday, 16 February 2014

சரியான நேரம்

நேற்று மாலை மூன்று மணிக்கு, அப்பா! என்னை Goethe-Zentrum-ல் ட்ராப் செய்து பிக் அப் செய்து கொள்ள முடியுமா? ப்ளீஸ்.
எத்தனை மணிக்கு வருண்?
இப்போ டாடி, மாலை 4 மணியிலிருந்து 5 மணிவரை.
என்னப்பா untime- இருக்கே? அதுவரை நான் என்ன செய்வது?
ஓகே! கிளம்பு.

அவனை ட்ராப் செய்து வண்டியை பார்க் செய்துவிட்டு, அப்படியே நடைபயிற்சி செய்யலாமென்று எனக்கு ஏற்கெனவே மிக பரீச்சயமான பாதையில் நடக்க ஆரம்பித்தேன், அடுத்த 30 நிமிடத்தில் டோ...ப், டொ...ப் என்று சரியான இடைவெளியில் பந்து அடிபடும் சத்தம், குழந்தைகளின் குதூகலமான குரல்கள், பெற்றோர்களின் ஆர்வமான காத்திருப்புகளுடன் கூடிய என்னுடைய டென்னிஸ் க்ளப்-க்குள்,நுழைந்து விட்டிருந்தேன்.

அடையாளம் தெறிந்து கொண்ட சிறுவர்கள் ஹாய் அங்கிள்! வருண் அண்ணா, வரவில்லையா? என்று கேட்க, கோச் நந்தக் குமார் என்னை பார்த்தவுடன் சிறுவர்களுக்கு ப்ரேக் கொடுத்தவாறு வெளியே வர, பிள்ளைகள் எல்லோரும் ஏறிபந்து விளையாட கிளம்ப, கோச்சின் மகள் ஷன்ஷிட்டா ஹாய் அங்கிள்! என்றவர்கள் எல்லோருக்கும் நான் ஏக காலத்தில் வணக்கம் சொல்லி முடித்து, என்ன ஷன்ஷிட்டா? (ஷன்ஷிட்டா இந்தியாவின் National Junior Champion-தற்போது வர்ஜீனியா டெக்-ல்) US-ல் இருந்து எப்போ வந்தாய்? என்று கேட்க நினைத்த போது என்னிடம் இருந்து ம்..க்க்..கும் என்று மட்டுமே சப்தம் வந்தது! ரிஷி ஏறிபந்தால்  தவறுதலாக என்னுடைய அடிவயிற்றுக்கு கீழே அடித்து வரவேற்பு கொடுத்தான்.(அப்பொழுது சிலர் இவர் பழைய வீரர் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, கிடைத்த சொற்ப நேர அற்ப சந்தோஷாத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்தான்)

கோச்சிடம் அப்படியே கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன், சார், நீண்ட நாட்களுக்குப் பிறகு குழந்தைகளின் இவ்வளவு சந்தோஷமான கூக்குரலை கேட்கிறேன், மற்ற இடங்களில் பிள்ளைகளிடம் இவ்வளவு உற்சாகத்தை நான் பார்ப்பதில்லை. பள்ளிக்குப் போவது போல் ஒரு கடமையாகத்தான் விளையாடுவதையும் செய்கிறார்கள் என்றுபோது, ஆமாம் ஸார்! நான் டென்னிஸ் விளையாட்டுடன் அவர்கள் சுதந்திரமாக பேசிக் கொள்வதற்கும், சுயமாக சிந்திப்பதற்குமான இடைவெளியையும் தருகிறேன் என்று சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய செயலில் எப்போதுமே ஒரு முன்யோசனையை பார்த்து இருக்கிறேன். இப்பொழுது கோச்சிங் டெக்னிக்கில் இருக்கும் Double Fisted Back Hand விளையாடுவதில் உள்ள என் தயக்கத்தை சொன்ன போது, என் வயது, என்னுடைய உடல் திறனை மனதில் கொண்டு சாதாரணமாக Back Hand விளையாட அனுமதித்ததை என்னால் மறக்க முடியாது.அவர் யாருக்கும் தன்னை நிரூபணம் செய்யத் தேவையில்லை-Shanshitta herself a Testimonial.

என்னுடய பெற்றோர்கள், என்னுடய Basket Ball கோச் பன்னீர் செல்வம், (விரைவில் உங்களை கண்டு பிடிக்கிறேன்!), என்னுடைய மனைவிக்குப் பிறகு, என் உடல் திறனையும், மனதையும் கட்டுக்குள் கொண்டு வந்தவர்களில் நந்தக்குமாரும் ஒருவர்.

விடைபெறும்போது திரும்ப விளையாட வாருங்கள் என்று சொன்னபோது, நான் யோசித்தவுடன், சரி! சார் வருணையாவது விளையாட அனுப்புங்கள் என்று சொன்னபோது அவருக்குத் தெரியும், அவருடைய வார்த்தைகளுக்கு நான் கட்டுப்படுவேன் என்று!

Thanks Coach!
Thanks Kids!
Thanks ரிஷி!
Thanks வருண்!

Tuesday, 17 December 2013

சென்னை Traffic

போதுமடா சாமி ! என்று சென்னையை விட்டு விலகி வருடங்கள் பல உருண்டோடினாலும், அதன் பந்தத்தை விட்டு விடாமல், நன்றி மறவாமைக்காக சில சமயங்களில்  வர வேண்டியிருக்கிறது.

இம்முறை "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்று உறவினர்களின் எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு வந்தும்  இங்கு வரவில்லை, அங்கு வரவில்லை என்று ஒரே குற்றக்கணை பாய்வதினால்தான்  இந்த புலம்பல்.

சரியாக எனது தெலுங்கானா நண்பன்  Manu Ramidi-ம், அமாம் சுந்தர்சென்னையில் ஒரு நாளைக்கு ஒரு இடம்தான் செல்ல முடியும் என்று சொல்கிறான்!

திரும்பவும் பட்டிக்காட்டான் பட்டிணத்தை பார்த்தது போல, ஏம்பா! எதுக்குப்பா இவ்வளவு Traffic என்று கேட்கத்தான் தோன்றுகிறது. நான் சென்னையை விட்டு ஓடியதற்கு முதல் காரணமே இதுதான். எங்கு பார்த்தாலும் விண்ணை மறைத்து மேம்பாலங்கள் முடிந்தும், முடிவடையா நிலையிலும் போக்குவரத்தை மேலும் மோசமாக்குகின்றன.எத்தனை பாலம் போட்டாலும், Flying Train விட்டாலும் பெருகிவரும்  Population-தான் அடிப்படைக் காரணம். போகிற போக்கைப் பார்த்தால் தாம்பரத்தில் இருப்பவர்கள் திங்கள் கிழமை, பெரம்பூரில் இருப்பவர்கள் செவ்வாய் கிழமை, கும்மிடிபூண்டியில் இருப்பவர்கள் புதன் கிழமைதான் நகரத்தினுள் வரவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது.

நான் வேண்டுமானால் அடுத்தமுறை திருமலாவிற்கு வருவது போல் முன்பதிவு செய்து விட்டு வருகிறேன்.


சென்னையில் இருப்பவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையான 
Fortress-க்குள் தான் இருக்கின்றனர்.

Monday, 16 December 2013


சீனா அண்ணன் தேசம்-சுபஸ்ரீ மோகன்.


சைனீஸ் Aggression at LOC போலவே உங்களுடைய "சீனா அண்ணன் தேசம்" என்னுடைய தேடுதலுக்கு உட்பட்டு, நான் வாங்கி என் கைகளுக்கு எப்படி வந்து சேர்ந்தது என்று எனக்கு தெரியாது.

என்னுடைய கல்லூரி நாட்களில் நடந்தேறிய, சீனாவின் Diplomatic  பாஷையில் June Fourth Incident என்று அழைக்கப்படும்-1989-ம் வருடம் Tinanmen Square-ல் நடந்த மாணவர் புரட்சியை அவர்கள் அடக்கிய விதம், நேரு காலத்தில் நம் இந்தியாவை ஏமாற்றிய விதம், குங் பூ படங்களில் அவர்கள்  அடித்துக் கொள்ளும் அடிப்படை காரணங்கள், அவர்களுடைய  அந்த Glee சிரிப்பு,எப்போதாவது நண்பர்களுடன் Chinese உணவகங்களில், சுத்த சைவனாகிய நான் அந்த வாசனைகளை பொறுத்துக் கொண்டதும்அவர்களுடைய மர்மமான தற்போதைய பொருளாதாரமும், உலக சந்தைகளில் உந்தி தள்ளப்படும் உணவு வகைகள், குழந்தைகள் பாவிக்கும் விளையாட்டுப் பொருள்களின் தரம் ஆகியவற்றில் உள்ள சந்தேகங்கள், அங்கு தொழிலாளர்கள் நடத்தப்படும் விதமெல்லாம் என்னுடைய மனதில் ஏற்படுத்தியிருந்த ஒரு விதமான அபிப்பிராயத்தை உங்களுடைய எழுத்து, நீங்கள் எடுத்துக்கொண்ட களம், கண்டிப்பாக ஒரு மாற்றத்தை உருவாகியுள்ளது என்றால் அது மிகையில்லை.

எல்லா நாடுகளிலுமே அந்த நாட்டின் அரசியல், அந்த நாட்டு மக்களின் மேல் நமக்கு ஒரு தவறான பரிமாணங்களைத்தான் கொடுக்கிறது.

உங்களுடைய அணுகுதல் ஒரு பயணக் கட்டுரையாக இல்லாமல், வாழ்வியல் சார்ந்ததாக இருப்பதால் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது.

குறிப்பாக உங்களுடைய அப்பார்ட்மெண்ட் தேர்வு, தண்ணீர், மின்சாரம் அவைகளுக்கான Prepaid முறை, ஆயுள் நீண்டவர்களின் வாழ்வு முறை, வீட்டு வேலைக்காரர்களின் அர்ப்பணிப்பு உணர்வு,விடுமுறையை தேர்ந்தெடுக்கும் முறை, திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்ந்து தாய் தந்தையரின் உணர்வுகளுக்கும்  மதிப்பளித்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது, மற்ற  நாட்டினரிடமிருந்து சீனர்களின்  உடல்மொழி வேறுபடுதல்,பூங்காவில் இலவச உந்து வண்டியில் முதியவர்கள் கூட ஏறத் தயங்கும் சுய மரியாதை-சுய உழைப்பு, உங்கள் குழந்தைகளின் பள்ளியை கண்டுபிடிப்பதில் நீங்கள் அடைந்த சிரமம், நீங்கள் சீனர்களின் திருமணத்தில் பரிசளிப்பதில் கடந்த சங்கடம், Ben-ன் தோழமை இவை யாவையும் மிகத் துல்லியமாக அனுபவித்து உணர்ந்து எழுதிஇருக்கிறீர்கள்.

நான் சீனாவை சுற்றுலாவின் மூலமாக தெரிந்து கொள்வதைவிட உங்களுடைய பதிவின் மூலமாக அதிகமாக  அறிந்து கொண்டேன் என்பது நிதர்சனம். உங்களுடைய நேர்த்தியான  பகிர்தல் என்னுடைய பரதேசி வாழ்க்கையை மீண்டும் துவக்கத் தூண்டுகிறது. .நிறைய நண்பர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் தங்கள் வீடு, அலுவலகம் மற்றும் சுற்றுலா தலங்களை தவிர, மற்றவை பற்றி விவரிக்க இயலாததை கண்டிருக்கிறேன்.

சீனர்களுடைய பெளத்த மடாலயங்கள் பற்றி நீங்கள் நேராகப் பார்த்து விரிவாக எழுதினால்,--"ஏழாம் அறிவு" திரைப்படத்தில் முழுமையாக தெரிவிக்கத் தவறிய-போதி தர்மரின்-சீனாவுடனான தொடர்பு பற்றி நீங்கள் எழுதினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

சாதரணமாக ஒரு புத்தகத்தை படித்தவுடன்,நம் மீதான அதன் பாதிப்பை பணிச் சுமை என்ற ஒரு போர்வையில் எழுதாம லும், , இந்தியர்கள் என்றால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நிறைய பாராட்டுவார்கள் என்று நினைத்துக் கொ ண்டால் என்ன செய்வது என்றும் நிறைய முறை எழுத தவறியிருக்கிறேன்.

ஆனால் உங்களுடைய "சீனா அண்ணன் தேசம்" என்னுள் சீனாவைப் பற்றி மேலும் நிறைய படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஒரு விமரிசனமாக பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இனிமையானவர்கள் இனிமையான நோக்கையே உடையவர்கள் என்பதை உங்கள் எழுத்து உணர்த்தியிருக்கிறது.

Shiyu.

Wednesday, 4 December 2013

30.11.2013


05.08.1999 கொல்கத்தா டெபுட்டேஷன்.

குணத்திலும், உருவத்திலும்,சீனியாரிட்டியிலும் பெரிய நண்பன் சமர் சௌத்திரியின் உதவிக்காக அன்றைய கல்கத்தாவில் இறங்கியவுடன், வாடகை டாக்ஸியில் ராஷ் பிஹாரி அவென்யுவிற்கு பயணம்.மெய் சிலிர்க்க ஹௌரா பிரிட்ஜ், ஈடன் கார்டன் ஸ்டேடியம் , விக்டோரியா மெமோரியல், தக்சிணேஸ்வர் காளிகோயில் கடந்து இடதுபுறம் திரும்பி "அமிதாப் தாபா" தாண்டியவுடன் ராஷ்பிஹாரி அவென்யூ கோமள விலாஸ்-ல் ஹால்ட்.

இன்னொரு மெய்சிலிர்க்கும் அனுபவம், டாக்ஸி டிரைவர் நான்கு ரூபாவை திருப்பிக் கொடுத்தது. கல்கத்தாவில் இருந்தவரை அவர்களிடம் என் வாதாடும் திறமையை காண்பிக்க தேவையே இல்லாமல் இருந்தது. காலை எக்மோர் அல்லது சென்ட்ரல் வந்து, வேளச்சேரி, கார்ட் டிராக் ரோடு-க்கு ஆட்டோ பிடிக்கும் அனுபவத்தை நினைத்தால் சென்ற இடத்திலேயே இருந்து கொள்ளத் தோன்றியது நினைவில் வந்தது.

முதல் நாள் வேலை ரணபீர் கோஸ்வமியுடன்,

Suswagatham Sir!

kya Munache Ranabir?

குசல விசாரிப்புகளைத் தாண்டி, வேலை எங்கே? என்று கேட்டால், ஒரே நாளில் மாணிக்தலா, கக்குர்காச்சி, பார்க் சர்கஸ், கரியா காட் என்கிறான், சாப்! டாக்ஸி எட்டு மணிக்கு வந்துவிடும் என்ற அறிவிப்பு வேறு!  பெங்காலிகளிடம் பேசும்போது நம்முடைய காதுக்கு சிறிது பஞ்சு தேடவேண்டும். லோக்கல் காலையே டிரங்கால் போல மிக எளிதாக பேசுவார்கள். இதற்கு செய்தி வாசிப்பாளர் ஆர்ணாப் கோஸ்வாமியும், போரியா மஜும்தாரும், தீதியும்தான் ஆதாரம்.

என்னதான் AC-ல் இருந்தாலும், குளித்து தலை துவட்டுவதற்குள் மீண்டும் வேர்வையில் குளிக்க வைக்கும் கொல்கத்தா, சென்னையே பரவாயில்லை என்று தோன்றும் அதிகப்படி ஈரப்பதம்,இரவு திரும்பும்போது கழுத்து டை-யின் நுனி முதல் வேர்வை.

அமிதாப் தாபாவில் 2 ருமாலி ரொட்டி அலுமினிய ஃபாயிலில் சுற்றிக்கொண்டு ஒரு "வார்"-ல் பனீர் பட்டர் கோர்மா வாங்கிக் கொண்டு திரும்பினால், கோமள விலாஸ் மாமா, சுந்தர்!போன் என்கிறார்.

எதிர்முனையில் சகதர்மிணி! ஜீ! வருணை DR. அனந்த கிருஷ்ணா-விடம் காண்பித்தேன்! Typhoid Fever என்று confirm செய்துவிட்டாள். ஆனால் வீட்டிலேயே வைத்து Treatment கொடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள், ஆகையால் நானே பார்த்துக் கொள்கிறேன்! You do not worry! Finish your work and come! I will manage.

காலையில் ராஷ்பிஹாரி அவென்யூவின் இரைச்சலுக்கிடையே-நாடார் கையேந்தி பவனில் வாணி ஜெயராமின்" மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடலைக் கேட்டுக்கொண்டு, பொங்கல் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ரணபீர் வந்து" சாப், வருண் இப்போது எப்படி இருக்கிறான் என்று வீட்டுக்கு போன் பண்ணிக் கேட்டீர்களா? என்று கேட்டதற்கு இல்லை ரணபீர்!இரவு வந்து கேட்டுக் கொள்ளலாம்! இல்லை என்றால் சென்னை ஆபீஸ்-ல் இருந்து யாராவது போய் பார்த்துக் கொள்வார்கள் என்று சொன்னதற்கு ஏதோ முணு முணுத்துக் கொண்டே டாக்ஸியில்  ஏறிக்கொண்டான்.

ஒரு வேளை உன்னை நம்பியும் ஒருத்தன் பெண் கொடுத்தானே! என்று சொல்லியிருப்பானோ!

இன்று மாலை ரணபீர் அலைபேசியில் GOOD EBENING Saab! என்று விளித்தபோது,அவனிடம் சொல்லாமல் விட்டது,

 ரணபீர்! அது வேறு காலம்!
20.11.2013


என் Cover Photo-வில் வந்திருக்கும் இந்த "டோனா ரிக்க்ஷா"-க்கள் இல்லாமல் கொல்கத்தா கிடையாது. ட்ராம், ட்டுயுப் ட்ரைன், டாக்ஸி-க்கள் இருந்தாலும் சிக்கனம் மற்றும் வசதி என்று பார்த்தால் இந்த கை ரிக்க்ஷா-டோனா ரிக்க்ஷா-காரர்கள்தான் கொல்கத்தாவை நகர்த்துபவர்கள் என்று சொல்லலாம்.

இந்த கை ரிக்க்ஷா-காரர்களின் ஆகிருதி ஒரு "கோலியாத்" போன்ற உருவம், உழைத்து உழைத்து கடுமையாக சமைத்த தேகக் கட்டு. இவர்களின் உணவு வெறும் கோதுமைக் கஞ்சிதான், கஞ்சி என்றால் வெறுமென கோதுமையை தண்ணீரில் கலந்து அப்படியே ஒரு கிளாஸ், இரண்டு கிளாஸ் என்று குடித்தால் ஒரு உணவு வேலை கடந்தது என்று அர்த்தம். சிறிது ஆடம்பரமான உணவு என்றால் சப்பாத்தி போடுவதற்கு முன் நாம் உருண்டை பிடித்து வைத்திருப்போமே, அதில் ஒரு இரண்டு, மூன்று உருண்டை அவ்வளவுதான். இன்னும் சிறிது கொண்டாட்டம் என்றால் இந்த உருண்டைகளோடு கொஞ்சம் உருளைக் கிழங்கு மசித்து, கொஞ்சம் சிறிய வெங்காயம் சேர்த்து, பச்சை மிளகாயுடன் சாப்பிடுவதுதான் அவர்களுடைய ஸ்டார் ஹோட்டல் விருந்து.

நாள் முழுக்க ரிக்க்ஷா, கோதுமை உருண்டை, நடை பாதை வாழ்க்கை இதுதான் அவர்கள் வாழும் முறை. வம்பு, தும்பு கிடையாது. ஒரு கைலி, ஒரு முண்டா பனியன் இது இவர்களுடைய உடை. மிக கம்பீரமான ஆத்மாக்கள்.

ஒவ்வொரு முறை நான் கொல்கத்தா- பார்க் சர்க்கஸ் செல்லும் போதும் இவர்களுடன் எனது மதியத்தை செலவு செய்திருக்கிறேன். எல்லோருமே பங்களாதேஷ்-ல் இருந்து வந்த அகதிகள், அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தங்கள் வாழ்கை நடத்துவது ஒரு பாடம்.

நான் அவர்களுக்கு வாடிக்கையாளர் என்பதை விட, நண்பன் என்பதே சிறப்பு.

சலாம் கொல்கத்தா!
19.10.2013

அவினாசி நெடுஞ்சாலையில், மிக சுறுசுறுப்பான காலை 9லிருந்து-11மணி வரையிலும் பிறகு மாலை 4-லிருந்து இரவு 8 மணிவரை வாகனங்களின் அணிவகுப்பு, எதோ இன்றே பிரபஞ்சத்தின் கடைசி நாள் என்பது போல் எல்லோரும் விரைகிறார்கள். அதில் சில பேர் அந்த இலக்கை அடைந்ததாக நேரிலும், செய்தியிலும் தெரிந்து கொள்வதுண்டு.

இப்போது சில நாட்களாக ஏதோ கலிங்கத்துப் போரில் வெற்றி கொண்டு வாகை சூடியது போல் JCB, POKELINER, இயந்திரங்கள் மற்றவர்களுடன் எந்த விதமான நேரக் கட்டுப்பாடோ, வேகக்  கட்டுப்பாடோ இல்லாமல், 80- களின் என்னுடைய ஆதர்ச 500cc BIKE  RACER- Kevin Schwantz கூட தோற்கடிக்கப்படும் வேகத்தில், பயமேயில்லாத நெளிவு சுழிவுகளுடன் ஆரவாரமாக செல்லுகிறார்கள்.

சில சமயம் இவர்களுடைய CRANE-கள் JAMES BOND படத்தில் வருவது போல் முன்னால் சென்று கொண்டிருக்கும் கனரக வாகனங்களை கூட அப்படியே தூக்கிச் சென்றுவிடும் போலிருக்கிறது. என்னவென்று கேட்டால் கோவை மாநகரெங்கும் பாதாள சாக்கடைகளுக்கும், குடி தண்ணீருக்குமான குழாய்கள் பதிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்களாம்.

ஏன் இவர்கள் அதிகாலையிலும், போக்குவரத்து ஓய்ந்த பிறகு இவர்களுடைய போக்குவரத்தை வைத்துகொள்ளக் கூடாதா? ஒரு JURASSIC PARK படம் பார்ப்பது போலிருக்கும் மற்ற வாகன ஓட்டுனர்கள் இவர்களுக்கு வழி கொடுத்துஓடி ஒளியும் காட்சி.

எப்போதும் போல் நம் நகரக் காவலர்களும் சேப்பாக்கில்  கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல் வியந்து, அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கோவையில் எல்லோருக்கும் கழுத்து  மற்றும் மூட்டு வலிக்காக எலும்பு மருத்துவர்களிடம் நேரம் ஒதுக்கச் சொல்லவேண்டும். இந்த JCB, POKELINER-ன் இரும்புக் கைகள் யார் தலையிலாவது ஆசிர்வாதம் செய்தால், அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் பாக்யராஜ், ஹாஜா ஷெரிப்-ன் கன்னத்தில் பளார் என்று அறைந்தவுடன், அடுத்த டேக்கில், அம்பிகாவின் கை வளையல்களை திருப்புவதற்காக அடகு வைத்த கடையின் வாசற்படியில் போய்  விழுவதுபோல், நேராக யமலோகம்தான்.யம கிங்கர்களுக்கு travelling allowanceகூட  கிடைக்காது.

சமீபத்தில் சரண் ராம் தன்னுடைய சுவரில் வடபழனியிலிருந்து STERLING ரோட்டில், இருச் சக்கர வாகன ஊர்வலத்தின் போது தான் "மக்கா" என்று அலறியதாக எழுதியிருந்ததை மறக்கமுடியாது. சாலையின் இரு ஓரங்களிலும் இவர்கள் ஒரு யானையின் கால் அளவுள்ள  drilling bit-ல் தோண்டும்போது எந்தவிதமான பாதுகாப்பும் பயணிகளுக்கோ, அல்லது இவர்களுடன் பணி புரிபவர்களுக்கோ கிடையாது. இவர்கள் தோண்டும் குழிகளுள் நாமே நம்முடைய உயர, பருமனுக்கு தகுந்த மாதிரிக்கு பார்த்து படுத்துக்கொள்ள வேண்டியதுதான், மற்றதை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

வளர்ச்சிப் பணி முக்கியம்தான் அனால் எந்தவிதமான முன்னெச்செரிக்கையும் இல்லாமல் செய்யும் பணி ஆபத்தையும், ஒரு விதமான பீதியையும் தான் நமக்கு கொடுக்கின்றன. நாம் இன்னுமொரு 20 அல்லது 30 வருடங்களை எப்படி கழிக்கப் போகிறோம் என்பது ஒரு சவால்.

45 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட, சா.கந்தசாமியின்  இறவாப் புகழ் பெற்ற சாயாவனம் புத்தகம் தான் நினைவிற்கு வருகிறது