Thursday, 8 May 2014


சிங்காரவேலன் எனது அத்தை மகன் (மாமன் மகன்) என்று சொல்வதிலே உரிமையும், இனிமையும் கலந்து பிரிக்க முடியாதவன் என்ற ஒரு உணர்வு இருக்கும். நாங்கள் இருவரும் 11,12,13 May 2012-ல், நடந்தாய் வாழி காவிரி(தி.ஜா-வின் வழிகாட்டுதலோடு), காவிரி தோன்றும் இடத்திலிருந்து, சிவசமுத்திரம் வரை ஒரு இண்டிகா காரில் ஓட்டுனர் நாகேஷ் உதவியுடன் பயணம் செய்தபோது, தம்புடு, பெங்களூரு ஆபிசில் உட்கார்ந்து வெட்டிக்கு புஸ்தகம்தானே படித்துக் கொண்டிருக்கிறாய், எனக்கு படிப்பதற்கு ஏதாவது suggest பண்ண முடியுமா என்று கேட்டதற்கு, நீ திரும்ப சென்னை போவதற்குள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அவன் எழுதிய Covering லெட்டெர்,

Singaravelan Baladandayutham
To Me
6 Jun 2012

hi dear

பொஸ்தக பரிந்துரை கேட்டில்ல. ம்ம் இதத்தான் விதின்னு சொல்வாங்க.
படி. மொந்த மொந்தையா   கள்ளு குடிச்ச மாதிரி இருக்கும்

அப்பனே படிச்சுபொலம்பி, விருவிதுர்த்து, அழுது, வருந்தி, மகிழ்ந்து, ரசிச்சு சிரிச்சு  கெட்டுப்போ.

படிக்க படிக்க -

இருவது / இருவத்தஞ்சு வருஷம் வீணடிச்சாச்சுனு   தோணும்.
அப்பன் ஆத்தாள வைய தோணும் (நல்ல பொஸ்தகத்தலாம் நமக்கு அறிமுகபடுத்தத் தெரியலேயே)    
குபுகுபுன்னு மோட்டுவளைய பாத்து பொக விடத் தோணும்
மழைல நனையத்  தோணும்
வெயில்ல நடக்கத்  தோணும்
இவ்ளோ பறவ பூவு இருக்கா -  பறவ புவ பேருலாம் தெரியலைனு தோணும்
தண்ணியடிக்கும் போது  அப்பளம் தான் சரியான சைடு டிஷ்ணு  தோணும்

இன்னும் நெறைய தோணும்!

அங்ஙனம்  தோண வாழ்த்துக்கள்

 அன்புடன்
தம்புடு

Wednesday, 7 May 2014

9th April 2006
A Day of Fugitive

போலாம் சார்!
ஆனால் நீங்கள் Rayban போடக்கூடாது!
செயின், மோதிரம் போடக் கூடாது!
Rolex கட்டக் கூடாது!
லூயி பிலிப் pant, Shirt போடக்கூடாது!
பங்கஜ் அடுக்கிகொண்டே போக,
ராஜீவ்-ஐ பார்த்து, பங்கஜ் என்னை  கஷாயம் உடுத்த சொல்கிறான் என்று சொன்னதற்கு,
ராஜீவ் பதிலாக,
ஆமாம் சார், நீங்கள் நெற்றியில் வைத்திருக்கும் சந்தனம்,குங்குமமே உங்களை மதராஸி என்று காண்பித்து கொடுத்துவிடும் என்றான்.

இடையில் ஜஹானபாத் நம்முடைய திண்டுக்கல் போல் பூட்டுக்கு பிரசித்தி பெற்றது, ரொம்ப விசேஷமான ஊர். மொத்த வடக்கு,வட கிழக்கு மாநிலங்களுக்கு கிரிமினல்களை அனுப்பி வைக்கும் ஊர். இரண்டு மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து மெயின் ரோட்டுக்கு சுரங்கம் தோண்டி ஒரு 20 பேர் தப்பித்து விட்டார்கள். அந்த இடத்தை தாண்டுவதுதான் மிகவும் ஆபத்தானது!ஆள் கடத்தலும் ஜாஸ்தி!முதல்ல உங்களைத்தான் தூக்குவாங்க! எப்படி சார் வசதி! அமர்தீப் சின்ஹா வேறு ரொம்ப பயமுறுத்தினான்!

ஏம்பா!  எவ்வளவு பேர் போயிட்டு வர்றாங்க! map-ல பார்த்தேனே,NH 83 என்று வேற இருந்ததே?

இல்ல சார், எல்லோரும் மொத்தமா டூரிஸ்ட் மாதிரி போனா பிரச்சினை இல்லை, சென்னை மாதிரி நிறைய பஸ்களும் கிடையாது!ரோடும் ரொம்ப மோசம், ஒரே செம்மண் புழுதி! என வேறு அந்த பட்னா Regional Manager நாராயணன் பயமுறுத்தினார்.

என்ன நாணா ! அப்புறம் எப்படி நம்ம ஞானம் பெறுவது?

ஒண்ணு செய்வோம் சார்! டாக்ஸி எடுத்திட்டு போயிட்டு இரவே திரும்பிவிடுவோம்! தாமோதர் சிங்கை அங்கேயே விட்டுவிட்டு வந்தால் அவர் கயா வேலையை பார்த்துக் கொள்வார்!

பங்கஜ் போய் வேண்டுமென்றே ஒரு ஓட்டை டாக்ஸியா பார்த்து எடுத்துக்கொண்டு வர, நான், நாணா, பங்கஜ், ராஜீவ், அமர்தீப், தாமோதர் சிங் ஆகியோர் எங்கள் புனித பயணத்தை துவங்கினோம்.
கிளம்பும் போதே எப்போதும் போல் காலை மணி 11. கார் ட்ரைவர் பங்கஜ்க்கு மிகவும் தெரிந்தவர். எங்களுடைய ரோலர் கோஸ்டர் பயணம் ஆரம்பிக்க  மோசமான காருக்கும், மோசமான செம்மண் ரோட்டுக்கும் நடந்தது ஒரு துவந்த யுத்தம். எங்களுக்கு முன்னாலும், பின்னாலும் ஒரே புழுதி.காருக்குள்ளும் தான்!

அப்படி இப்படி என்று ஜகானாபாத் தாண்டும்போது ஒரு கஷ்டமும் இல்லாமல் கடந்து, மாலை சுமார் 4 மணிக்கு போதியை அடைந்து, புத்தம் சரணம், கச்சாமி சொல்லி,புல்லரித்து மெய்சிலிர்த்து, அங்கிருந்து நம் வீட்டிற்கெல்லாம் பேசி நீங்கள் நினைத்துப் பார்க்காத இடத்திற்கு நான் வந்து இருக்கிறேன் என்று சொல்ல,எல்லோரும் நீ புண்ய ஆத்மா தான் என்று வாழ்த்த, நேரம் கடந்து கொண்டிருந்தது.

அங்கிருந்து ஒரு 25 KM  தொலைவில் உள்ள விஷ்ணுபாத் சென்று, விஷ்ணுவின் பாதங்களுக்கு நாமே பூஜை செய்யலாம் என்பதால், அங்குள்ள பண்டிட்களின் உதவியுடன் பூஜை செய்துவிட்டு, திரும்ப வந்து,விட்டுப்போன"பால்கு"நதியை தரிசித்து முடிக்கும்போது 6 மணி.
நாணா, சார் பேசாமல் இங்கே இன்று தங்கிவிடலாம் என்று சொல்ல, பங்கஜும், கார் டிரைவரும் இல்லை! இல்லை! எவ்வாறாவது பட்னா திரும்பவேண்டுமென சொல்ல, திரும்பவதாக தீர்மானித்தோம்!

சரியாக பங்கஜ் ஆரம்பித்தான், சார்! நானும் டிரைவரும் காலையிலிருந்தே பீடா போடவில்லை! குறிப்பாக டிரைவருக்கு பீடா போட்டாதான் கார் ஓட்டவரும் என்று சொல்ல, பீடா கடையை தேடி போனால் அந்த ஊரில் உள்ள அனைவரும் அந்தக் கடையை முற்றுகை இட்டு இருந்தனர். ஒரு வழியாக எல்லோரும் பீடா போட்டு, பூமியை சிவப்பாக்கி கிளம்பும்போது,இரவு 7 மணி!

மறுபடியும் பங்கஜ் ஆரம்பித்தான்! நாம் ஜகானாபாத் நெருங்குவதால், எல்லோரும் சட்டையை கழற்றி கொள்ளலாம் என, எல்லோரும் சட்டையை கழற்றிக் கொண்டு, வேர்வையில் குளித்து, பனியனுடன் காரினுள் அமர்ந்து இருந்தோம்!பங்கஜ் பிறகு எல்லோருக்கும் இன்னொரு ரவுண்டு பீடா தர, எங்களுக்கு அவன் ஒரு Nativity கொண்டு வர முயற்சிக்கிறான் என்று தெரிந்தது.ஜகானாபாத் மக்களிடம் அவ்வளவு பயம்!

ஒருவாறு நாங்கள் மஹா நிர்வாணம் அடைந்து  பட்னா திரும்பியபோது இரவு 11மணி.

மனிதன் ஆசையை துறந்தால், ஏது இவ்வளவு அவஸ்தை!

உயிர் மேல் ஆசை இல்லாமல் எப்படி?

நாங்கள் போய்வந்த இடம் புத்த கயா.

பின்குறிப்பு
____________
தலையில் துணி கட்டியவாறு இருப்பவர்தான் பங்கஜ். முகத்திலேயே குறும்பு கொப்பளிக்கும்.ஒரு வாரத்திற்கு முன் பேசும்போது, சார்!இப்போது அவ்வளவு கடத்தல் பயம் இல்லை, மேலும் அப்போது லாலு வேறு இருந்தார்.ரோடுகள் கூட நன்றாக போட்டுவிட்டனர் என்றார். எப்படியோ நல்லா இருந்தாச் சரிதான்!

















கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்தாயிற்று. தெற்கு,தென் மேற்கு திசை மட்டும் எப்போதும் ஏதாவது பாக்கி இருந்து கொண்டே இருக்கிறது. பெரியப்பா! நான் இன்னும் கன்னியாக்குமரியில் சூர்யோதயம் பார்க்கவேயில்லை என எனது சகோதரனின் 7-ம் வகுப்பு படிக்கும் மகன்  சூர்யா கேட்க,  இந்த பாரிஸ்டர் ரஜினிகாந்த், கண்ணன் தொல்லை தாங்கமுடியலைப்பா!என்ற அலம்பலுடன் மந்திரிசபை ஒப்புதல் அளிக்க கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கொண்கண் வழியாக திரும்புவதென்று தீர்மானம் செய்யப்பட்டது.

எத்தனை முறை நாம் professional&Pleasure Trip வழியாக பார்த்தாயிற்று, என்ற சலிப்பில்லாமல் இருக்க, சுவாரஸியம் கூட்ட, நான் Les Stroud-க்கு நிபந்தனை கொடுப்பது போல், கீழ் கண்டவாறு  தடை விதித்தேன்.

No Travel Agency.
No Friends & Relative-s Support!
திருவனந்தபுரத்திற்கு No Flight,
மற்ற தொலைவுகளுக்கு No Taxi,
தங்குமிடங்களுக்கு No Auto.

என்று சொல்ல சிறிது தயக்கத்துடனேயே, தங்குவதற்கு, பயணம் முடிந்து ஊர் திரும்ப ரயிலில் நேராக வருவதற்கு online reservation செய்து முடித்தனர்.

கோவையிலிருந்து திருவனந்தபுரம் வரை சாதாரண பேருந்துகள், நகர பேருந்துகளில் பயணம் செய்யப் பழகினர்.

விவேகானந்தர் பாறைக்கு Boat -ல் இடம் பிடிப்பதற்கு மட்டும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அடுத்த இடத்திற்கு செல்லும் நேரத்தை அது  வெகு நேரத்திற்கு தள்ளியதால் சிறப்பு கட்டணம் செலுத்தினோம். ஆனால் அந்த சலுகையிலும் ஒரு நிபந்தனை, திரும்ப வரும்பொழுது வரிசையில் நின்றுதான் வரவேண்டும் என்று இருந்தது.

நான் ஒவ்வொரு முறையும்  ஸ்வாமி விவேகானந்தர் பாறைக்குச் சென்றபோதும் வெவ்வேறு மனநிலையில் போனாலும், திரும்ப வரும்பொழுது மிகுந்த தெளிவுடனேயே வந்திருக்கிறேன்.(மறக்க முடியாதது-ரெஸ்ட் ரூம்கள் மிக சுத்தம்). திரும்ப வரிசையில் நின்று, படகில் ஏறி திருவள்ளுவர் சிலையில் இறங்கினால், எங்கள் பின்னால் யாரும் இறங்கவில்லை. ஒருவேளை வசதிகள் சரியாக செய்யப்படாததும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் பேருந்திற்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த போது அவர்களுக்கு நிறைய செய்திகள் சொல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வந்த பேருந்தின் நேர்த்தியை  பார்த்தபோது எனக்கே சிறிது கலக்கமாயிற்று.

பேருந்தில் ஏறி புறப்பட்டவுடன் அவர்களது குதூகலம் திரும்பியது.மண்டைக்காடு தாண்டிய போது மூவரும், இந்த இடம்தான்-நீ தானே பொன் வசந்தம்-படத்தில் வந்த இடம் என்று அவர்கள் இரகசியம் பேசியது என் காதுகளிலும் விழுந்தது.

கன்னியாகுமரி தாண்டும் வரை அந்த வெயில் அவர்களை படாத பாடு படுத்தியது எனக்கும் சிறிது  கஷ்டத்தைக் கொடுத்தது.

திருவனந்தபுரம், கோவளம், கொச்சின், எர்னாகுளம் என்று சுற்றியதில் வாடி வதங்கி விட்டனர். திருவனந்தபுரம் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஊர் ஆகிவிட்டது. கோயில், அதை சார்ந்த இடங்கள் ஸ்ரீ அனந்த பத்மனாப ஸ்வாமியின் பிரமாண்டம், குளம், மனிதர்கள் எல்லாம் ஒரு காரணம். திருவனந்தபுரத்தை பற்றி நானும் உடல் வணங்கி,தனியாக எழுத உள்ளேன். தமிழர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

திரும்பும்போது, ஆஹா டாடி! தங்குவதற்கும், உண்பதற்கும், Return Journey-க்கும் கொடுத்த 5 ஸ்டார் comfort எங்களுக்கு ரொம்ப happy என்று சொன்னபோது, எனக்கும் பரமானந்தம் தான்.

ஆனால் நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை உணர்த்த மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது!

Wednesday, 23 April 2014

முதலில் என்னுடைய தந்தையின் வாசிப்பு வாயிலாக , பிறகு பள்ளி பருவத்தில் "சில நேரங்களில் சில மனிதர்கள்" திரைப் படத்தில் லக்ஷ்மி, ஒய்.ஜி.பி, ஸ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பில் பார்த்து பிரமித்து, அவரின்  மற்ற படைப்புகளை சிங்கார வேலனுடன் பகிர்ந்து கொண்டதும்,  நினைவுக்கு வருகிறது.என்னுடைய உணர்வில் காதல், திருமணம், சமூக அறிவு போன்றவற்றில் அவருடைய பாதிப்பும் இருக்கிறது. 90-களில் ஆழ்வார்பேட்டையில் பணி புரிந்தபோது, சிறிது தாமதமான இரவு வேளைகளில் அந்த குறுக்கு சந்துகளில் அவர் நடந்து சென்றதை பார்த்ததும் நினைவிருக்கிறது. என்னுடைய நண்பன் ரவி என்ன சார்? ஏதோ சிங்கத்தைப்    பார்ப்பது போல்  வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கடிந்து கொண்டதும்  நன்றாகவே நினைவிருக்கிறது.

JK பூரண நலம் பெற"வும்" வாழ்த்துகள்!

Saturday, 29 March 2014

1983-88
----------
Hostel திருவிளையாடல்
----------------------------------
ஸ்டவ் திரி சிறிது மொத்தமாக இருக்கும், அதில் தீ பொறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து தீயை அணைத்தால், கங்கு அணையாமல் இருக்கும், அதன் சாம்பல் விழுவதற்கு நிரம்ப நேரமாகும்.
--------------------------------------------------------------------------------------
வார்டன் ஒதுக்கிய அறை எண் 63-ல் நுழைந்தால் இன்றைய செசென்ஸ் கோர்ட் நீதிபதி  முருகேசன், அண்ணாமலை யுனிவெர்சிட்டி பௌதீக இயல் துறை DR. சலீம், அன்றைய என் அறை நண்பர்கள்.

அறை 63-க்கு இடதுபுறம் இரண்டாவது, மூன்றாவது தளத்துக்கான படிகள், வரிசையாக திறந்தவெளி ரெஸ்ட்ரூம்கள், பிறகு அறை எண் 1-ன் வலதுபுற சுவர்.மாடிப் படிகளின் கீழ் EB மீட்டர் மற்றும் வரிசையாக மூன்று தளங்களின் மெயின் சுவிட்சுகள்.

நல்ல வேளையாக முதல் தளத்திலேயே அறை கிடைத்ததில் மகிழ்ச்சி! அதை தெரிவிக்கும் போதே, இருவரும் ரொம்ப சந்தோஷப் படாதே! இரவு வேளையில் நம்முடைய சீனியர்கள் மேல் தளங்களுக்குப் போகும் முன் நம் அறைக்  கதவைத் தட்டி திருடன் போலீஸ் விளையாடுவார்கள். ரெஸ்ட்ரூம்க்கு வரும் மற்ற நண்பர்கள் பேஸ்ட், சோப்பு ஓசிக் கேட்பார்கள். எல்லாவற்றையும் விட கதவைத் தட்டி, தட்டி ரொம்ப ரகளை பண்ணுவார்கள் என புலம்ப ஆரம்பித்தனர்.

--------------------------------------------------------------------------------------
லுங்கி உடுத்தும் சூழல் கிடைத்தும் லோக்கல் கார்டியன் பாலு மாமாவின் கண்டிப்பான உத்தரவின் பேரில் வேஷ்டி, வெள்ளை கை வைத்த பனியன் தான் போட வேண்டி இருந்தது.
--------------------------------------------------------------------------------------
இரவு முழுவதும் புதிய சூழல் மற்றும் மேல் தளத்திற்கு இரண்டாம் காட்சி பார்த்துவிட்டுப் போகும் நண்பர்கள் அந்த நேரத்திலும் மகிழ்ச்சியுடன் கதவைத் தட்டி விளையாடிச் சென்றதன் காரணமாக சிறிதும் தூங்க முடியவில்லை. பத்து, பதினைந்து நாள் இப்படியே கழிந்தது. முருகேசன், சலீம் புலம்புவதின் அர்த்தம் முழுவதுமாக புரிந்தது.

அன்று ஞாயிறு காலை எங்களுடைய வெஜ்.மெஸ்ஸில்  பிரட்&குருமாதான் காலை உணவு.
முருகேஷ்! நாம் அப்படியே வெளியே சென்று சாப்பிட்டு விட்டு எனக்கு கொஞ்சம் ஸ்டவ் திரி வாங்க வேண்டும் என்று சொல்ல
என்ன மச்சி? சாப்பிடப் போகலாம், ஆனால் எதற்குத் திரி வாங்க வேண்டும்?!.
நீ முதல்ல கிளம்பு, சாப்பிட்டுக் கொண்டே உனக்கு சொல்கிறேன்.
அப்படியே நடந்து போய் திரி வாங்கிய போது, முருகேஷ் இதுதான் என் ஐடியா, நீ சலீமை மட்டும் கரெக்ட் செய்துவிடு.
--------------------------------------------------------------------------------------
பயந்தால் நிம்மதி போய்விடும். பயப்படுபவர்கள் எதற்காக பயப்படுகிறார்கள் என்று வெளியே சொல்வதில்லை.
--------------------------------------------------------------------------------------
சலீம் இவன் சொல்வது  நல்லத் திட்டமாகத் தெரிகிறது, என்ன சொல்கிறாய் என முருகேஷ் கேட்க,அதற்கு சலீம், டேய்!  வேணாண்டா! மாட்டிகொண்டால் பின்னிவிடுவார்கள்.
நான், சலீம் இங்க பாரு, நீ நிம்மதியாக தூங்க வேண்டுமா? இல்லையா? நம்மை யாராவது பார்த்துவிட்டால் கூட ஒன்றுமே நடக்காதது மாதிரி போய்விடுவார்கள்.

சலீம் திட்டத்துக்கு ஒத்துக்கொண்டு விட, சலீம் எங்களது அறைக்குள் தாழ் போடாமல் கதவின் பின்னால் ஒரு ஸ்டூல் வைத்து விட்டு நாங்கள் குரல் கொடுத்தவுடன், கதவைத் திறந்து பிறகு தாழிட வேண்டும்.

முருகேஷ் நான் சைகை செய்தவுடன் எல்லா மெயின்  சுவிட்ச்களையும் அணைத்துவிட வேண்டும். திரும்பவும் போட்டுவிட்டு அறைக்குள் என்னோடு நுழைந்து விட வேண்டும்.

சீனியர்கள் இரண்டாம் காட்சி முடிந்து, பேருந்து கிடைக்காமல் நடந்தே வந்து, அயற்சியாக மாடிப் படி ஏற ஆரம்பித்தனர். நான் என்னுடைய கழுத்தில் கம்பளி ஒன்றை சுற்றிக் கொண்டு, வெள்ளை வேட்டி, பனியனுடன், திரியை கங்குடன் வைத்துக் கொண்டு மூச்சைப் பிடித்துகொண்டு ரெஸ்ட்ரூம் தூணிற்குப் பின்னால் நிற்கிறேன்.

சிறிது சிறிதாக நண்பர்கள் மெல்ல மெல்ல மேலே ஏறிவர, அவர்கள் எப்போதும்போல் கதவைத் தட்ட,முருகேஷ் விளக்கை அணைக்க, நான் திரியை ரஜினி சிகரெட் முழுங்குவது போல் வாய்க்குள் கொண்டுபோய், பற்களால் திரியை மெட்டிக் கொண்டு, வாயைத் திறக்காமல் ஒரு ஓலமிட, என்னுடைய பற்களின் இடைவெளியில் தீயின் ஜ்வாலை சிகப்பாக ஒளிர, அவர்கள் என்னைக் கொள்ளிவாய்ப் பிசாசு என்று நினைத்துக் கொண்டு ஓட, நான் விரட்ட, அவர்கள் உயிர்மேல் உள்ள ஆசையில் திரும்பிப் பார்க்காமல் ஓடினர்.

நான் கொஞ்சம் விரட்டிவிட்டு முருகேஷ்-ஐ கூப்பிட, அவன் விளக்குகளை திரும்பப் போட்டுவிட்டு, இருவரும் எங்கள் அறைக்குள் நுழைய, சலீம் தாளிட சிரித்துக்கொண்டும், பாராட்டிகொண்டும், அன்று முழுவதும் நாங்கள் உறங்கவே இல்லை.

பயந்து ஓடியதில் அவர்கள் மின் விளக்குகள் அணைந்து திரும்ப எரிந்ததை அவர்கள் உணரவே இல்லை. அவர்கள் முதல் தளத்தில் கொள்ளிவாய் பிசாசு இருப்பதாகவே நம்பினர்.
-----------------------------------------------------------------------------------------------------------
நம்பிக்கையில் தானே வாழ்க்கையே இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------

அந்த 5 வருடமும் முதல் தளம் எங்கள் மூவரின் கண்ட்ரோல்-லில் தான் இருந்தது.




Saturday, 22 March 2014

எனக்கு சாதரணமாக டர்பன் கட்டிய சீக்கியர் என்றால் மிகப் பிடிக்கும், தூர்தர்ஷனில் இருந்த தேஜெஷ்வர் சிங், நடிகர் கபீர் பேடி ஆகியோரின் ராக்ஷஸ ஆகிருதிகள், மற்றும் என்னுடைய நண்பன் வீரேந்தர் சிங் பஞ்சாப் பற்றி சொல்லும் வீர வரலாறு எல்லாம் கூட ஒரு காரணம்.(அவனிடம் சர்தார் ஜோக்குகளை சொல்வதற்கு எனக்கு மனம் வந்ததே இல்லை). ஆனால் இதிலெல்லாம் பொருந்தாத குஷ்வந்த் சிங்-கின் அக்கப்போர்-களை அவ்வப்போது,குறிப்பாக இந்த ராஜ்கபூர் உரையாடல், அன்னை இந்திரா அவர்களைப் பற்றிய விமரிசனம் ஆகியவற்றை கேட்டே வளர்ந்திருக்கிறேன். எனக்கு விவரம் தெரிந்து அவரை Illustrated Weekly-ன் ஆசிரியர் என்ற அளவே தெரியும்.அவர் எழுதிய புத்தகங்கள் எதுவும் படித்ததில்லை.என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு Blissful Sikh.

நேற்றைய Hindu-வில்,
Khushwant Singh Practished at Lahore High Court.
After 1947, he joined the foreign services and served as a diplomat for a few years in London, Paris and Ottawa. He would latter describe his years of law practicing and diplomacy as "wasted years of my Life". In 1951, Mr.Singh began his career as journalist with the All India Radio, and by 1969, joined as editor at Illustrated Weekly.

Oh Khuswant Ji, you are an enigma!

இரண்டு நாளைக்கு முன்பு, Headlines Today-ல் டிசம்பர்-2009 Recap, கோச் வித் கோயல், குஷ்வந்த் சிங் இண்டர்வியூ பார்த்துக் கொண்டிருந்த போது என் மனைவி சொன்ன வார்த்தை एक गंधा लडका.

உனக்கு பிடிக்காதது எல்லாம் எனக்கு பிடிக்குமே!


Khushwant Singh's Last Big Public interaction.

http://www.bharatnewschannels.com/headlinestoday-news-watchonline/on-the-couch-with-koel-kushwant-singhs-acid-wit-video_849c504ec.html

2003

அவரை உனக்கு நல்லாத் தெரியும்னு சொல்றியே சுந்தர்! வேணா கேட்டுப் பாக்கலாமா?

வீரராகவனுக்கு அவரை எப்படியாவது TRAINING PROGRAMME-ல் பேச வைத்துவிட வேண்டும்!
கேட்டுப் பாக்கலாம் சார்! அவர் ஒகே சொன்னவுடன் பால்கிஷன் ஸாருக்கு சொல்லிக்கலாம்.
உடனே கிரீம்ஸ் ரோடு அப்போல்லோ ஹாஸ்பிட்டல் சென்று அவர் செக்ரெட்ரியிடம் என் விசிட்டிங் கார்டை கொடுத்தவுடன், அவர் உள்ளே சென்று உடனே திரும்பியவர்,
ஸார், அடுத்த பேஷன்ட்டுடன் உங்களை உள்ளே வரச் சொல்கிறார்!

A MAN WITH MODESTY!

அடுத்து உள்ளே சென்றவுடன் 6 1/2' அடி உருவம், கம்பீரமாக DR.K.P. MISHRA. MD., DM (CARDIOLOGIST), நவீன காலத்து ECG-ன் தந்தை, உலக புகழ் பெற்ற இருதய நோய் நிபுணர்,எங்களுடன் உள்ளே வந்த பேஷன்ட்டை தன் அருகே அமர சொல்லிவிட்டு,

SIT DOWN GENTLEMEN! ஒரியா வாசனையுடன் ஆங்கிலம்.

வீரராகவன் சிறிது தயங்கும் போதே, I SAY YOU SIT DOWN!

A MAN OF CURT!

DR. MISHRA, பேஷன்ட்டிடம் திரும்பி, அவருக்கு செய்யப்பட்ட சர்ஜரி-ஐ ஒரு CD-ல் இருந்து போட்டுக் காட்டி, விளக்கியவாறே,மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்.

வீரராகவன், ஏன் சுந்தர், முடியுமா?

பார்க்கலாம் சார்!

பேஷன்ட் எழுந்து செல்ல, உங்கள் நெஞ்சை கையில் பிடித்தவாறே இருக்க வேண்டாம், நான் தான் சரி செய்துவிட்டேனே, என்று அவரிடம் சிரித்தவாறே ஆதுரமாய் சொல்லிவிட்டு, என்னுடைய கார்டை கையில் வைத்துக் கொண்டு,

YES MR. SUNDAR!

நான் உடனே டாக்டர், எங்கள் நிறுவனத்தின் ஒரு ட்ரைனிங் ப்ரோக்ராம்மில் நீங்கள் ஒரு LECTURE கொடுக்க வேண்டும்.

HOW MANY OF YOU?

நீங்கள் வர முடியுமா?

நான் தான்  நீங்கள் எத்தனை பேர் என்று கேட்டு விட்டேனே?

WHAT TOPIC?

நான் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்.
JOY OF WORKING, பற்றி பேசலாமா? அவரே முடித்து விட்டார்.

Thank You Doctor! இந்த தேதியில் முடியமா?

தனது மொபைல் போனின் எண்ணைக் கொடுத்து, ஒரு நாள் முன்னதாக நினைவு படுத்தினால் போதும் என்று சொல்ல,

எப்படி arrangements வேண்டும் Doctor?

இரண்டு மணி நேரம் முன்னதாக ஒரு TAXI அனுப்பினால் போதுமானது.Please note "Not a Company Car"!

ஓகே டாக்டர்!

பிறகு அவர் அன்று கொடுத்த உரையில் காலை வாக்கிங், யோகாவின் நிலைகள், சவால்களை எப்படி எடுத்துகொள்வது, உணவு எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்துகளை சரியாக எழுதினால்  நான் ஒரு BEST SELLER!

பிறகு விடை பெறும்போது ஒரு எண்பது பேருக்கு தான் எழுதிய "JUST A MINUTE DOC" ஜோக் புத்தகத்தை ஆட்டோக்ராப் செய்து கொடுத்து விட்டு, சுந்தர்! ECR ரோட்டில் 'கானாத்தூர்-ல் என் உதவியுடன் கட்டபட்ட ஜெகநாத் கோயிலுக்கு( replica of PURI) அனைவரையும் கூட்டிச் சென்றுவிட்டு எனக்கு போன் பண்ணி சொல்ல வேண்டும்! என்று சொன்னவரை,
பிறகு கோட்டுபுரத்தில் இருக்கும் வரை அதிகாலையில்  நான் சென்னை திரும்பும் நேரத்தில்,அவர்  நடை பயிற்சி செய்யும் போது சந்தித்ததுண்டு.

Doctor! You left a rich Legacy to fellow Doctors and a common man like me!

I MISS YOU DOCTOR!

(DR. K.P. MISHRA PASSED AWAY ON 15TH MARCH 2014)