Wednesday, 6 August 2014

Ajantha--10
-----------------
அந்த ஓவியங்களை இந்த முறை வேறுவிதமான, பக்குவப்பட்ட (என்றுகூட சொல்லலாம்),மனோநிலையில் தரிசிக்கும்போது என்னுடைய காதுக்குள் மட்டும் கீழ்க் கண்ட வரிகள் என்னை வேறு உலகத்துக்கும், ரசிக்கும் நிலையை வேறொரு உயரத்திற்கும் அழைத்துச் செல்கிறது.

காலத்தை வென்றவரின் எழுத்துகள்....
காலத்தை வென்ற படைப்புகளை தேடி அறியும் பக்குவத்தை கொடுத்திருக்கிறது...

அந்த அற்புதமான இரகசியத்துக்கு உலகில் வேறு யாரும் கற்பனை செய்ய முடியாத இரகசியத்துக்கு-என்னுடைய உயிரை ஈடாக வைத்தாயே!நீ நன்றாக இருக்க வேண்டும்! சொல்கிறேன் கேள்!
மரஞ் செடிகளின் இலை ,வேர், காய், விதை முதலிய தாவரப் பொருள்களைச் சாறுபிழிந்து காய்சிச் சாதரணமாக வர்ணங்கள் குழைப்பது வழக்கம். தாவரப் பொருள்கள் காய்ந்து, உலர்ந்து அழிந்து போகக் கூடியவை.  ஆகையால் அவற்றிலிருந்து  உண்டாக்கப்படும் வர்ணங்களும் சீக்கிரத்தில் மங்கி அழிந்து போகின்றன.ஆனால், மலைகளிலும் பாறைகளிலும் சிற்சில பகுதிகள் இயற்கை வர்ணம் பெற்று விளங்குகின்றன. இந்த வர்ணங்கள் காற்றுக்கும், வெயிலுக்கும்,மழைக்கும் மங்குவதில்லை.அழிவதில்லை.ஆகவே இந்த வர்ணப் பாறைகளை பொடி செய்து அதற்கேற்ற பக்குவப்படி அரைத்துக் குழைத்து உண்டாக்கும் வர்ணங்கள் அழிவதே கிடையாது.இம்மாதிரி வர்ணப் பாறைகளைப் பொடித்துக் குழைத்த வர்ணங்களைக் கொண்டுதான் அஜந்தாவின் சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன...பரஞ்சோதி!அஜந்தா சங்கிராமத்தைச் சேர்ந்த பிஷூக்களைத் தவிர வேறு யாரும் அறியாத பரம இரகசியத்தை உனக்கு நான் சொல்லிவிட்டேன் என்று நாகநந்தி சொல்வதாக கல்கியின் வார்த்தைகள்....

அடுத்த பதிவுகள் முழுக்க முழுக்க என்னுடைய உணர்வுகள், என்னுடைய வார்த்தைகளில் பதிய விழைகிறேன். அஜந்தா ஓவியங்களை விவரிக்கும்போது கல்கியின் எழுத்துகளை தாண்டிசெல்வது அவ்வளவு எளிதானதல்லவே!

இங்கே கொடுத்திருக்கும் ஓவியங்களில் சூரிய வெளிச்சமோ, அல்லது டார்ச் லைட்டின் வெளிச்சமோ படும்போது அது என்ன மாயாஜாலங்களை நிகழ்த்துகின்றன என்று அறியும்போது, 2000-ம் வருடங்களுக்குப் பிறகும் இந்த ஓவியங்கள் நமக்காக காத்திருக்கின்றனவா? அல்லது நாம் இவ்வளவு சீக்கிரம் உணரும் பாக்கியம் செய்திருக்கிறோமா என்று நினைத்து பார்க்கும்போது அடையும் பிரமிப்பில் பலமுறை மூச்சு விட மறந்து நின்றது என் நினைவில் இருந்து என்றைக்கும் அழியாது!

I am out of the World!
Celestial........
Ajantha--9
---------------
எனக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து,-நான் அஜந்தா மலைக் குகைகளில் வளர்ந்து வந்தேன். அஜந்தா சங்கிராமத்தில் பிஷூக்களும் அவர்களுடைய சிஷ்யர்களும் இருந்தார்கள். என் இருபதாவது பிராயம் வரையில் உயிருள்ள பெண்ணை நான் பார்த்ததில்லை.அதாவது சதை, இரத்தம், எலும்பு, நகம் ஆகியவற்றால் ஆன மானிடப் பெண்ணை பார்த்ததில்லை. ஆனால் ஜீவனுள்ள பெண்களை பார்த்திருக்கிறேன். ஒருவனுடைய இருதய அந்தரங்கம் வரைக்கும் சென்று ஊடுருவிப் பார்க்கும் சக்தி வாய்ந்த விசால நயனங்களுடைய பெண்களைப் பார்த்திருக்கிறேன்.மானிட குலங்களுக்கு எட்டா தெய்வீக சௌந்தர்யம் வாய்ந்த மடமங்கயர்களைப் பார்த்திருக்கிறேன்.அழகுக்கு அழகு செய்யும் திவ்விய ஆபரணங்களை அணிந்த அனங்குகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு பெண்ணின் வடிவம் என் சிந்தையை கவர்ந்திருந்தது. அவளுடைய பொன்னிற மேனியின் சோபையை அவள் இடையில் உடுத்திருந்த நீல நிறப் பட்டாடையும், மாந்தளிர் நிறத்து உத்தரீயமும் அதிகமாக்கிக் காட்டின. புன்னகை பூத்த அவளுடைய செவ்வாம்பல் மலரின் சிவப்பு நிறமும் ஒன்றையொன்று தூக்கியடித்தன. தாமரை இதழ்போல் வடிவம் அமைந்த அவளுடைய கண்களின் கருவிழிகள் என் இருதயத்தில் நான் அதுகாறும் அறிந்திராத வேதனையும், இன்பமும்உண்டாயின=====

மேலே குறிப்பிட்டுள்ள வரிகள் அனைத்தும் கல்கி, "சிவகாமியின் சபதத்தில்" நாகநந்தி பிஷூ தன் சகோதரன் புலிகேசியிடம் கூறுவது போல் அமைந்த உரையாடல்!

இவைகளை வெகு காலம் முன் படித்தும், சமீபத்தில் Bombay Kannan Kannan  ஒலி புத்தகத்தில் கேட்டும்,நான் என்னுடைய கற்பனையில் ஸ்தாபித்திருந்த அஜந்தா குகை ஓவியங்களை நேரில் கண்டபோது இன்னும் பல அரிய தகவல்களை அறிய முடிந்தது, ஆனந்தம், பேரானந்தம்!

அடுத்த பதிவில் ஓவியங்களுக்கான களமும், சாகாவரம் பெற்ற வர்ணங்களையும்  பற்றி......

Ajantha---8
----------------
நமது கோயில்களில் கூட சிற்றின்பத்தில் ஈடுபட்டிருக்கும் மாதிரியான சிற்பங்கள், குறிப்பாக கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோபுரத்தில் பார்த்திருக்கிறேன்.கோபுரம் முழுவதுமே  காமசூத்திராவின் வெவ்வேறு நிலைகள் செதுக்கப்பட்டுள்ளது.அஜந்தாவுக்கும், சாரங்கபாணி கோயிலுக்கும் நான் குறிப்பிடும்படியான அளவுக்கு என்ன தொடர்பு என்று பார்த்தால், சாரங்கபாணி கோயிலும்,அஜந்தாவும் சம காலத்தில் உருவாக்கப்பட்டது.அதாவது இரண்டுமே 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது(சாரங்கபாணி கோயில் கோபுரம் இடிபாடுகள் வெவ்வேறு கால கட்டத்தில் சீரமைக்கப்பட்டிருக்கலாம், அதனால் வாத்சாயனரின் காமசூத்திர நிலைகளை அமைத்திருக்கலாம் என்றிருந்தால் கூட வாத்சாயனரின் காலம்(Common Era) 3-ம் நூற்றாண்டு). காமசூத்ராவை ஓவிய வடிவில் இதுவரை நான் எங்கும் பார்த்ததில்லை.

அஜந்தாவில் அந்த மாதிரி எந்த சிற்பங்களும் இல்லை.ஓவியங்களும் இல்லை. ஆனால் ஆண்,பெண் அங்க லாவண்யங்கள், வடிவங்கள்,நம்மை விட திரட்சியுடன்,திடகாத்திரமாகவும்,முழு வளர்ச்சி கண்டதாகவும், அவர்கள் அந்த கால கட்டத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்கள், வஸ்திரங்கள் நம்மைவிட நாகரீகம் மிகுந்ததாகவும் இருக்கின்றன.நம்மை வெவ்வேறு உணர்வுகளுடன் பெருமூச்சை செலவழிக்க வைக்கின்றன.அந்த சிற்பிகள், ஒவியர்களின் நாகரீக உணர்வு,ஆளுமைத் தன்மை நம்மை மூர்ச்சை அடைய வைக்கின்றன,குறிப்பாக ஆற்றாமை, இயலாமை,இவைகளை வருங்காலத்தில் எவ்வாறு காத்து வைத்துக் கொள்ளப் போகிறோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது!

அஜந்தா ஓவியங்கள், சிற்பங்கள் எல்லாமே நைஷ்டிக பிரம்மச்சாரிகளான புத்த பிஷூக்களால் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.ஒரு குறிப்பிட்ட காலம் வரை(சந்நியாசிகளாக இருக்கும்போதே)வெளி உலகத்தின் தொடர்பு அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை.ஆனால் அவர்கள் சந்நியாசம் மேற்கொண்ட வயது ஒருவேளை இல்வாழ்க்கையை சுகித்திருக்கும் வாய்ப்பை தந்திருக்கலாம்.புத்த பெருமானே இல் வாழ்கையை சுகித்தவர்தானே!

குறிப்பிடும்படியான ஓவியங்களை இணைத்திருக்கிறேன்!
Ajantha--7
---------------
மொத்தம் முப்பது குகைகள் என்றாலும் சுமார் 25 குகைகளுக்குள் செல்வதற்கு மட்டுமே அனுமதி.எல்லா குகைகளிலும் சிற்பங்களும், ஓவியங்களும் இருக்கின்றன. ஆனால் அதனுடைய Stability, காலத்திற்கேற்ப, பாரமரிப்புக்கேற்ப வேறுபடுகின்றன.

முதலில் 28-வது குகையிலிருந்து 21-வது குகை வரை காலை 9 மணியிலிருந்து 11மணி, 20-வது  குகையிலிருந்து 7-வது குகை வரை-காலை 11மணியிலிருந்து மாலை 3 மணி, மற்ற 6 குகைகளை மாலை 5மணி வரை பார்ப்பதற்க்கு தயாராகுதல் உத்தமம்.போன பதிவில் சொன்ன மாதிரி சூரியனின் சஞ்சாரத்திற்கு தகுந்த மாதிரி குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தயாராக முடியவில்லை என்றாலும் எல்லா குகைகளிலும் "Sober fibreoptic lighting" (இங்கு sober-என்பதற்கு thoughtful & gentle என்றே பொருள் கொள்ள வேண்டும்) வசதிகள் செய்யப் பட்டுள்ளன.இந்த வசதிகளைப் பார்த்தபோதுதான் நான் என்னுடைய முதல் பதிவில் Don Brown-ன் Anjels&Demons புதினத்தில், வாட்டிகன் நகரின் தொன்மையான நூலகத்தில் Robert Langdon சிவப்பு ஒளியில் தேடுவதை குறிப்பிட்டு இருந்தேன்.அஜந்தா குகைகளில் பச்சை நிற ஒளிர்வுகள் உபயோகிக்கப் படுகின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
சிவப்பு&பச்சை ஒளிர்வுகள் ஏன் உபயோகிக்கப் படுகின்றன? மேலும் Robert Langdon என்ன தேடினார்? என்ற இரு கேள்விகளுக்கும் இந்த பின்னூட்டத்தில் பதிலளிப்பவர்களுக்கு, நான் இன்னும் வெளியிடாத புகைப் படங்களை தொகுத்து DVD-ஆக, உங்களை வந்தடையுமாறு செய்வதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
------------------------------------------------------------------------------------------------------------
ஆனால், சூரிய ஒளியில் அந்த ஓவியங்களை பார்த்தல் வெவ்வேறு கால கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்.நீங்கள் மூர்ச்சை அடையாமல் இருக்க புத்தம், சரணம், கச்சாமி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். பார்த்ததை நினைவில் கொள்ள ஹயக்ரீவ மந்திரம் உசிதமானது.

குகைகளில் சூரிய ஒளி பற்றி சொல்லும்போது, 1986-ல் நான் சித்தன்ன வாசல்,ஓவியங்கள், ஏழடிப் பட்டம் ஆகியவற்றை முதன் முதலாக தரிசித்தபோது,சித்தர்கள்(இங்கு ஜைனர்கள்)சூரிய வெளிச்சத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்வதில் மிகுந்த சிரத்தை கொண்டவர்கள் என்று கேள்விப் பட்டதாக நினைவு. அஜந்தா புத்த பிஷூக்கள் இம்மாதிரி, தேவையான நேரத்திற்கு மட்டும் சூரிய ஒளி உள் வருமாறு அமைத்திருப்பார்களோ என்பது என் உள்ளுணர்வு.சில குகைகளில் சாளரம் நுழைவு வாசலின் மேல் சுமார் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.சில குகைகளில் பக்க வாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.அம்மாதிரியான இடங்களில், மற்ற குகைகளில் வெளிச்சம் தேவையில்லாமல் நுழைய முடியாது, மிக சாமர்த்தியமாக அமைக்கப்பட்டுள்ளது>

குகைகள் தியானம் செய்வதற்கும், பாடம் படிப்பதற்கும், வசிப்பதற்கும்,Auditorium போன்ற வசதியுள்ள(Auditorium குகைக்கு தனியாக ஒரு பதிவு எழுதலாம்)உறங்குவதற்கும் ஆக, 30 குகைகளும் ரக வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன.(அந்த காலத்திலேயே, எப்பிடி,எப்பிடி-1900 வருடங்களுக்கு முன்னாலேயே)
                                           
                                                                                        .....மீதி 8-ம் பதிவில்
------------------------------------------------------------------------------------------------------------
நாம் பார்க்கச் செல்லும் குகைகளை அடைவதற்கு முன்னரே களைப்பு அடைந்து விடும்படியான தூரம், சிரமமான வழிதத்தடம். வியர்வை உறுஞ்சுவதற்கு தோதாக எளிதான உடை, எளிதில் கழட்டும்படியான, மெலிதான காலணிகள் மிகவும் அவசியம்.சுமார் 20 குகைகளில் காலணிகளை வெளியே விட்டுதான் செல்லவேண்டும்.Fast Food வகைகள் கையில் வைத்துக் கொள்வது நலம். குகைகளில் கிடைக்கும் குடிதண்ணீர் மிகவும் சுவையாக இருந்தாலும், ஒரு சிறிய வாட்டர் பாட்டில் வைத்துக் கொள்வது நலம்.சிங்க வால் குரங்குகள் ஏராளம்!
------------------------------------------------------------------------------------------------------------
Ajantha--6

சிறிது மூச்சு வாங்கிக் கொண்டே,

ஆமாம், நாம் வடக்கு நோக்கி நடந்து இருக்கிறோம், அப்படி என்றால் மேற்கு திசை கடந்து, வடக்கு, மீண்டும் கிழக்கு திசை முழுவதுமாக கடக்கப்போகிறோம், அதாவது அஜந்தா குகைகள் குதிரையின் குளம்பு வடிவில் அமைக்கப் பட்டிருகின்றன.

அப்படியா? நீங்கள் ஏன் பின்னாலேயே வருகிறீர்கள்?

அவர்களிடம் நான் சொல்லாதது,
சில சமயங்களில் நாம் வேகமாக உத்வேகத்துடன்,முன்னேறி நடக்கும் போது, இல்லை அப்பா! எங்களால் நடக்க முடியவில்லை, ஏற முடியவில்லை! என்று புலம்புவதற்கான வாய்ப்பு அதிகம். இவ்வாறு பின்னால் நடக்கும்போது, பரவாயில்லை! அப்பாவே முடியாமல் நடக்கும் போது நாம் தொந்திரவு கொடுக்க கூடாது என்று அவர்கள் உற்சாகமாக முன்னேறும் முகாந்திரங்கள் அதிகம் உண்டு.

பெரும்பாலும் நாம் போயிருப்பது ஒரு Pleasure Trip என்ற மனோநிலையில், சிரமமான வழிகளை நாம் தவிர்க்கும் நிலையில், சிறிய தடை கூட மிகுந்த கஷ்டத்தைக் கொடுக்கும். ஆனால் நாம் மனதளவில் தயார் நிலையில் இருக்கும் போது உடல் உபாதைகளையும்  மிக எளிதாக கடந்துவிடலாம்.

ஏன் ஜீ! இந்த சிற்பங்கள், ஓவியங்கள் எல்லாம் மிகவும் மதிப்பு கூடியது, பழமையானது என்று சொல்கிறார்களே, நம்மால் அதை சரியாக உணர்ந்து கொள்ள முடியுமா?இவ்வளவு சிரமங்களுக்கு Justification கிடைக்குமா?

கண்டிப்பாக!

ஆனந்தம் அறிந்து கொள்வதில்தான் இருக்கிறது!உணருவதில் அல்ல--
                                                                               பகவான் ஸ்ரீ.கிருஷ்ணர்.

(நான் எடுத்த புகைப் படங்கள் எல்லாவற்றையும் ஆல்பமாக இந்த 'தொடர் எழுத்து' முடிந்தவுடன் வெளியிடுகிறேன். நிறைய வித்யாசம் இருக்கும், ஓவியங்களின் வயது,சரியான கோணங்களை எடுக்க முடியாத மாதிரியான கட்டுப்பாடுகள்,பிளாஷ் உபயோகப் படுத்தாமல் எடுப்பதும் மிகுந்த வேறுபாட்டை  உருவாக்குகிறது)Ajantha--5
----------------
பர்தாப்பூர் (Fardapur) T-ஜங்ஷன்க்குப் பிறகு நம்முடைய வண்டிகளை நிறுத்த சொல்லி  MTDC -AC பஸ்களில் நம்மை 5KM தொலைவில் உள்ள அஜந்தா வில்லேஜ்-ல் கொண்டு போய் விடுகின்றனர். தினமும் காலை 9 மணி to 5:30மணி வரை சுற்றி பார்க்க முடியும், முடியாவிட்டால் யாரும் அந்த அஜந்தா குகைகளில் இருக்க முடியாது, வந்துவிட்டு அடுத்த நாள்தான் சென்று பார்க்க முடியும்.Ajantha Caves-ல் அருமையான MTDC உணவகம் இயங்குகிறது.இருந்தாலும் கையில் போதுமான அளவுக்கு உணவு, தண்ணீர் வைத்துக் கொள்வது மிக மிக நல்லது.குகை ஒரு 4 அல்லது 5KM விஸ்தீரனத்திற்கு பரவி உள்ளது ஆகையால் திரும்ப வந்து செல்வது என்பது இயலாது. டோலி வசதி இருக்கிறது.நாம் குகைகளுக்கு செல்ல இன்னொமொரு இரண்டு பதிவுகள் ஆகலாம்!---------மற்றவை பிறகு,

எப்போதும் போல் விஜி, வருண் முன்னால் செல்ல, நான் பின் தொடருகிறேன், இதில் இணைக்கப்பட்டுள்ள புகைப் படங்கள் மீதி விஷயங்களை சொல்லிவிடும் என நினைக்கிறேன்.

இருவரும் என் கண் பார்வையிலேயே  இருந்தாலும் என் நினைவுகள் நாகநந்தி பிஷூவும், புலிகேசி சக்கரவர்த்தி பேசிக் கொள்ளும் பகுதிகளுக்கு சென்றுவிடுகிறது..........

வாதாபிச் சக்கரவர்த்தி நாகநந்தியிடம் கீழ் வருமாறு சொல்கிறார்!
அண்ணா! நீ சொல்லி இருந்தபடியே நான் நதி வழியை பிடித்துக் கொண்டு போனேன்.வளைந்து வளைந்து போன நதியோடு எத்தனை தூரம் போனாலும் மனித சஞ்சாரமே இல்லை. அடிக்கடி எதிரே சுவர் வைத்தது போல் மலை நின்று அப்பால் வழி இல்லையென்று தோன்றியது. போகப்போக இப்படியே இருந்தது.ஒருவேளை நீ சொன்னதை நான் நன்றாய்த் தெரிந்து கொள்ளாமல் தப்பான வழியை பிடித்துக் கொண்டு போகிறேனோ என்று எண்ணினேன். அதைவிட பயங்கரமான எண்ணம் ஒன்று தோன்றியது. நீ ஒருவேளை என்னை ஏமாற்றிவிட்டாயோ, சித்தப்பன் மங்களேசனிடம் போய் சமாதானம் செய்து கொண்டு இராஜ்யம் ஆளப் பார்க்கின்றாயோ என்று நினைத்தேன். கடைசியில் அஜந்தாவின் அற்புதச் சித்திர குகைகளை அடைந்தேன்.

விஜியின் குரலில் நிஜ உலகிற்கு வந்தேன்!

2000 வருடங்களுக்குப் பிறகும் வாதாபிச் சக்கரவர்த்தி விவரித்ததில், நாம் அந்த வழிகளில் கடுகளவும் மாற்றமில்லாததை உணர முடிகிறது!

(கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் எழுதும்போது எல்லா இடங்களுக்கும் சென்று வந்ததாக குறிப்புகள் இருகின்றது. குறைந்த பட்சம் இது கல்கி அவர்கள் அஜந்தாவை தரிசித்த பிறகு எழுதியதாக தான் இருக்க வேண்டும், அதாவது வாதாபிச் சக்கரவர்த்திகளின் குரலின் மூலமாக சொல்லும் செய்திகள்)

என்ன ஜீ ? நாம் 28-ம் எண்ணுள்ள குகைக்கு வந்து விட்டோம்! மற்றவர்கள் எல்லாம் அந்த பாதையில் செல்கிறார்கள் என்ற போதும், பரவாயில்லை என்று சொன்னீர்களே? தவறாக ஆரம்பிக்கிறோமோ?  

இல்லை இல்லை! காரணம் இருக்கிறது.............................அடுத்த பதிவில்,


Ajantha--4
-----------------
சுமார் 1900 வருடங்களுக்கு முன், குறிப்பாக கிறிஸ்துவுக்கு முன்,  ஸஹயாத்ரி மலைத்தொடரும், நர்மதாவின் கிளை நதியான வஹோரா-வும் இணையும் இடத்தில், மிக வைராக்கியமுள்ள  புத்த சந்நியாசிகளால் எழுப்பப் பட்டிருக்கிறது.இது எங்கோ ஒரு பொருளை செய்து கொண்டு வந்து இன்னொரு இடத்தில் நிர்மாணிக்கப்படும் செயலாக இல்லாமல், அந்த இடத்திலேயே ஒரு மலைத் தொடரை, செதுக்கி வேண்டாதவற்றை கழித்து, தங்களுக்கு வேண்டிய வகையில் செய்து கொள்ளும் ஒரு மாய வித்தை. தவறு நேர்ந்துவிட்டால் திரும்ப சரி செய்ய முடியாது , அல்லது வேறு ஒரு  இடத்திற்கு அப்புறபடுத்த முடியாது என்ற ஒரு முடிவிலிருந்து, தலைகீழாக, விடையிலிருந்து வினாவிற்கு வரும் முறை!

கண்டிப்பாக ஒருவரோ அல்லது ஒத்த கருத்துகளுடைய பல மனிதர்களின் தீர்மானத்தை, கனவை எவ்வளவு பேர், எவ்வளவு காலம் மேற்கொண்டனர் என்ற கணக்கு இல்லாமல் முதலாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தொடரப்பட்டுள்ளது. நிகழ் காலத்தில் திட்டம் ஒன்று செயல் ஒன்று என்றிருக்கும்போது இதை கருக்கொண்டவர் எப்படி இத்தனை பேரை, இத்தனை காலத்திற்கு உடன்பட வைத்திருக்க முடியும், தன்னுடைய இறுதி காலத்தை உணர்ந்து அடுத்தவரிடம் பொறுப்பை கொடுத்து, காலத்தால் அழியாத மஹா காவியத்தை நிகழ்த்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் பரப்பப்பட்ட, ஸ்வீகரிக்கப்பட்ட ஒரு மதத்தினர், வெறும் சாதாரண மனிதர்களை மட்டும் கொண்டிருந்திருக்க முடியாது! ஆனால் அந்த கால கட்டத்தில், அது ஒரு புதிய மதம்!மற்றவர்களின் ஒத்துழைப்பு என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்?என்ற வினாக்களுக்கு விடைகள் கிடையாது.பஞ்ச பூதங்களே சாட்சி!

புத்த சந்நியாசிகள் மட்டுமே இந்த இடத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளதால் சம்சார வாழ்க்கையில் இருந்தவர்களின் உதவி இருந்திருக்க முடியாது. நம்மால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது, எத்தனை சந்நியாசிகள் சேர்ந்து இதை உருவாக்கி இருக்க முடியும்? என்று. அவர்களுக்கு ஊதியம் கிடையாது என்றாலும், என்ன மாதிரியான உற்சாகம் கொடுக்கப்பட்டிருக்கும்?

சரி, அப்படியே அவர்கள் பற்றற்ற சந்நியாசிகள் தானே? என்று ஒரு விவாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும், அப்படியொரு நாகரீகம், கலாச்சாரம்,கொண்ட நிபந்தனை அற்ற, எதிர்பார்ப்பு இல்லாத மஹா மனிதர்களாத் தான் இருந்திருக்க முடியும்! அவர்களுக்குத் தெரியுமா? தம்முடைய படைப்புகள் இவ்வளவு புகழ் பெறுமென்று! கடமையை செய்வோம்! என்ற ஒரே நோக்கமாகத்தான்  இருந்திருக்க முடியும்!

மடாலயங்கள், விஹாரங்கள், பள்ளிகள் என்று பகுத்து கொண்டாலும் தூண்கள், விதானங்கள், மேற்கூரை, விட்டங்கள் அவ்வளவும் சிற்ப வேலைப்பாடுகள், சுற்றுப் புற சுவர்கள் எல்லாம் ஓவியங்கள்!

இதனிடையே பருவ வேறுபாடுகள், சூரியனின் சஞ்சாரத்தைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்ட"மாஸ்டர் பிளான்"

(நான் அங்கு எடுத்த புகைப் படங்கள்--இறுதியாக!)
Ajantha--3
----------------
இதற்கு முன்னால் அங்கு இரண்டு முறை சென்றிருந்தும், தேனிலவு சென்று  வந்தவர்களிடம் அங்கு என்ன பார்த்தீர்கள்? என்று கேட்டால், அவர்கள் என்ன பதிலை சொல்வார்களோ, நானும் அதைத்தான் பகிர்ந்து கொண்டதாக நினைவு! இந்த முறை 20 வருடம் கழித்து செல்வதால், ஒரு பத்ம வியூகம் அமைப்பதற்கு தேவையான அத்தனை முன்னேற்பாடுகளுடன் சென்றது காலத்தினால் அழியாத(?)நினைவுகளையும், சரித்திர புருஷர்கள் உலவிய இடங்கள் எது, எங்கு என்று தேடி, உணர்ந்து திரும்ப முடிந்தது.

ஏன் எல்லோரா அவ்வளவு உசத்தி இல்லையா? என்றால், எல்லோரா 5-ம் நூற்றாண்டில்தான் உருவாக்கப் படுகிறது.மேலும் ஹிந்து, பெளத்த, மற்றும் ஜைன கோட்பாடுகள் கூடிய கலவை!

ஆனால் அஜந்தா, முதலாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை, மிக நீண்ட காலத்திற்கு, தொடர்ச்சியாக புத்த மதத்தினரால் மட்டும் குடை வரை பெற்றது. மேலும் சளுக்கிய இளவரசர்கள் நீலகேசி(நாகநந்திபிஷூ), புலிகேசி ஆகியோர் இந்த மடாலயங்களில் பயின்று, புத்த குருமார்களின் உதவியோடு அரசு அமைக்க முடிந்திருக்கிறது!

என்னுடைய புகைப்பட நிபுணத்துவம் பெற்ற நண்பர்கள்,மற்றும் Archaeological Survey of India, Rajesh Singh ஆகியோர் வெளியிட்ட  புத்தகங்கள் மூலம் நிறைய தகவல்கள் பெற முடிந்தது!
Ajantha--2

I carry a fireball, since I humbled at Ajantha Caves. It has happened to me during my 9th standard, when I was reading the legendary Kalki's "Sivagamiyin Sabatham", I was not able to read any other.Now I want to write my experience of Ajantha caves tour but it would be a sheer Travelogue.I know it's a challenge I personally took it, to write with the connections I have acquired so long.Is it humanly possible to  write the giant leap of my ancestors? But I would indeed write it as a proud Indian.I am at the cross road for now.............


Ajantha--1
---------------

The éther, at Ajantha monastery was a similitude to the experiences of Robert Langdon and Vetra @ the Secret Archives of the Vatican except for the lack of Oxygen-Angels and Demons, Dan Brown
Keep Guessing!