Wednesday 6 August 2014

Ajantha--4
-----------------
சுமார் 1900 வருடங்களுக்கு முன், குறிப்பாக கிறிஸ்துவுக்கு முன்,  ஸஹயாத்ரி மலைத்தொடரும், நர்மதாவின் கிளை நதியான வஹோரா-வும் இணையும் இடத்தில், மிக வைராக்கியமுள்ள  புத்த சந்நியாசிகளால் எழுப்பப் பட்டிருக்கிறது.இது எங்கோ ஒரு பொருளை செய்து கொண்டு வந்து இன்னொரு இடத்தில் நிர்மாணிக்கப்படும் செயலாக இல்லாமல், அந்த இடத்திலேயே ஒரு மலைத் தொடரை, செதுக்கி வேண்டாதவற்றை கழித்து, தங்களுக்கு வேண்டிய வகையில் செய்து கொள்ளும் ஒரு மாய வித்தை. தவறு நேர்ந்துவிட்டால் திரும்ப சரி செய்ய முடியாது , அல்லது வேறு ஒரு  இடத்திற்கு அப்புறபடுத்த முடியாது என்ற ஒரு முடிவிலிருந்து, தலைகீழாக, விடையிலிருந்து வினாவிற்கு வரும் முறை!

கண்டிப்பாக ஒருவரோ அல்லது ஒத்த கருத்துகளுடைய பல மனிதர்களின் தீர்மானத்தை, கனவை எவ்வளவு பேர், எவ்வளவு காலம் மேற்கொண்டனர் என்ற கணக்கு இல்லாமல் முதலாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தொடரப்பட்டுள்ளது. நிகழ் காலத்தில் திட்டம் ஒன்று செயல் ஒன்று என்றிருக்கும்போது இதை கருக்கொண்டவர் எப்படி இத்தனை பேரை, இத்தனை காலத்திற்கு உடன்பட வைத்திருக்க முடியும், தன்னுடைய இறுதி காலத்தை உணர்ந்து அடுத்தவரிடம் பொறுப்பை கொடுத்து, காலத்தால் அழியாத மஹா காவியத்தை நிகழ்த்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் பரப்பப்பட்ட, ஸ்வீகரிக்கப்பட்ட ஒரு மதத்தினர், வெறும் சாதாரண மனிதர்களை மட்டும் கொண்டிருந்திருக்க முடியாது! ஆனால் அந்த கால கட்டத்தில், அது ஒரு புதிய மதம்!மற்றவர்களின் ஒத்துழைப்பு என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்?என்ற வினாக்களுக்கு விடைகள் கிடையாது.பஞ்ச பூதங்களே சாட்சி!

புத்த சந்நியாசிகள் மட்டுமே இந்த இடத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளதால் சம்சார வாழ்க்கையில் இருந்தவர்களின் உதவி இருந்திருக்க முடியாது. நம்மால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது, எத்தனை சந்நியாசிகள் சேர்ந்து இதை உருவாக்கி இருக்க முடியும்? என்று. அவர்களுக்கு ஊதியம் கிடையாது என்றாலும், என்ன மாதிரியான உற்சாகம் கொடுக்கப்பட்டிருக்கும்?

சரி, அப்படியே அவர்கள் பற்றற்ற சந்நியாசிகள் தானே? என்று ஒரு விவாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும், அப்படியொரு நாகரீகம், கலாச்சாரம்,கொண்ட நிபந்தனை அற்ற, எதிர்பார்ப்பு இல்லாத மஹா மனிதர்களாத் தான் இருந்திருக்க முடியும்! அவர்களுக்குத் தெரியுமா? தம்முடைய படைப்புகள் இவ்வளவு புகழ் பெறுமென்று! கடமையை செய்வோம்! என்ற ஒரே நோக்கமாகத்தான்  இருந்திருக்க முடியும்!

மடாலயங்கள், விஹாரங்கள், பள்ளிகள் என்று பகுத்து கொண்டாலும் தூண்கள், விதானங்கள், மேற்கூரை, விட்டங்கள் அவ்வளவும் சிற்ப வேலைப்பாடுகள், சுற்றுப் புற சுவர்கள் எல்லாம் ஓவியங்கள்!

இதனிடையே பருவ வேறுபாடுகள், சூரியனின் சஞ்சாரத்தைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்ட"மாஸ்டர் பிளான்"

(நான் அங்கு எடுத்த புகைப் படங்கள்--இறுதியாக!)




No comments:

Post a Comment