Wednesday, 4 December 2013

19.10.2013

அவினாசி நெடுஞ்சாலையில், மிக சுறுசுறுப்பான காலை 9லிருந்து-11மணி வரையிலும் பிறகு மாலை 4-லிருந்து இரவு 8 மணிவரை வாகனங்களின் அணிவகுப்பு, எதோ இன்றே பிரபஞ்சத்தின் கடைசி நாள் என்பது போல் எல்லோரும் விரைகிறார்கள். அதில் சில பேர் அந்த இலக்கை அடைந்ததாக நேரிலும், செய்தியிலும் தெரிந்து கொள்வதுண்டு.

இப்போது சில நாட்களாக ஏதோ கலிங்கத்துப் போரில் வெற்றி கொண்டு வாகை சூடியது போல் JCB, POKELINER, இயந்திரங்கள் மற்றவர்களுடன் எந்த விதமான நேரக் கட்டுப்பாடோ, வேகக்  கட்டுப்பாடோ இல்லாமல், 80- களின் என்னுடைய ஆதர்ச 500cc BIKE  RACER- Kevin Schwantz கூட தோற்கடிக்கப்படும் வேகத்தில், பயமேயில்லாத நெளிவு சுழிவுகளுடன் ஆரவாரமாக செல்லுகிறார்கள்.

சில சமயம் இவர்களுடைய CRANE-கள் JAMES BOND படத்தில் வருவது போல் முன்னால் சென்று கொண்டிருக்கும் கனரக வாகனங்களை கூட அப்படியே தூக்கிச் சென்றுவிடும் போலிருக்கிறது. என்னவென்று கேட்டால் கோவை மாநகரெங்கும் பாதாள சாக்கடைகளுக்கும், குடி தண்ணீருக்குமான குழாய்கள் பதிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்களாம்.

ஏன் இவர்கள் அதிகாலையிலும், போக்குவரத்து ஓய்ந்த பிறகு இவர்களுடைய போக்குவரத்தை வைத்துகொள்ளக் கூடாதா? ஒரு JURASSIC PARK படம் பார்ப்பது போலிருக்கும் மற்ற வாகன ஓட்டுனர்கள் இவர்களுக்கு வழி கொடுத்துஓடி ஒளியும் காட்சி.

எப்போதும் போல் நம் நகரக் காவலர்களும் சேப்பாக்கில்  கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல் வியந்து, அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கோவையில் எல்லோருக்கும் கழுத்து  மற்றும் மூட்டு வலிக்காக எலும்பு மருத்துவர்களிடம் நேரம் ஒதுக்கச் சொல்லவேண்டும். இந்த JCB, POKELINER-ன் இரும்புக் கைகள் யார் தலையிலாவது ஆசிர்வாதம் செய்தால், அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் பாக்யராஜ், ஹாஜா ஷெரிப்-ன் கன்னத்தில் பளார் என்று அறைந்தவுடன், அடுத்த டேக்கில், அம்பிகாவின் கை வளையல்களை திருப்புவதற்காக அடகு வைத்த கடையின் வாசற்படியில் போய்  விழுவதுபோல், நேராக யமலோகம்தான்.யம கிங்கர்களுக்கு travelling allowanceகூட  கிடைக்காது.

சமீபத்தில் சரண் ராம் தன்னுடைய சுவரில் வடபழனியிலிருந்து STERLING ரோட்டில், இருச் சக்கர வாகன ஊர்வலத்தின் போது தான் "மக்கா" என்று அலறியதாக எழுதியிருந்ததை மறக்கமுடியாது. சாலையின் இரு ஓரங்களிலும் இவர்கள் ஒரு யானையின் கால் அளவுள்ள  drilling bit-ல் தோண்டும்போது எந்தவிதமான பாதுகாப்பும் பயணிகளுக்கோ, அல்லது இவர்களுடன் பணி புரிபவர்களுக்கோ கிடையாது. இவர்கள் தோண்டும் குழிகளுள் நாமே நம்முடைய உயர, பருமனுக்கு தகுந்த மாதிரிக்கு பார்த்து படுத்துக்கொள்ள வேண்டியதுதான், மற்றதை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

வளர்ச்சிப் பணி முக்கியம்தான் அனால் எந்தவிதமான முன்னெச்செரிக்கையும் இல்லாமல் செய்யும் பணி ஆபத்தையும், ஒரு விதமான பீதியையும் தான் நமக்கு கொடுக்கின்றன. நாம் இன்னுமொரு 20 அல்லது 30 வருடங்களை எப்படி கழிக்கப் போகிறோம் என்பது ஒரு சவால்.

45 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட, சா.கந்தசாமியின்  இறவாப் புகழ் பெற்ற சாயாவனம் புத்தகம் தான் நினைவிற்கு வருகிறது

No comments:

Post a Comment