Wednesday 4 December 2013

20.11.2013


என் Cover Photo-வில் வந்திருக்கும் இந்த "டோனா ரிக்க்ஷா"-க்கள் இல்லாமல் கொல்கத்தா கிடையாது. ட்ராம், ட்டுயுப் ட்ரைன், டாக்ஸி-க்கள் இருந்தாலும் சிக்கனம் மற்றும் வசதி என்று பார்த்தால் இந்த கை ரிக்க்ஷா-டோனா ரிக்க்ஷா-காரர்கள்தான் கொல்கத்தாவை நகர்த்துபவர்கள் என்று சொல்லலாம்.

இந்த கை ரிக்க்ஷா-காரர்களின் ஆகிருதி ஒரு "கோலியாத்" போன்ற உருவம், உழைத்து உழைத்து கடுமையாக சமைத்த தேகக் கட்டு. இவர்களின் உணவு வெறும் கோதுமைக் கஞ்சிதான், கஞ்சி என்றால் வெறுமென கோதுமையை தண்ணீரில் கலந்து அப்படியே ஒரு கிளாஸ், இரண்டு கிளாஸ் என்று குடித்தால் ஒரு உணவு வேலை கடந்தது என்று அர்த்தம். சிறிது ஆடம்பரமான உணவு என்றால் சப்பாத்தி போடுவதற்கு முன் நாம் உருண்டை பிடித்து வைத்திருப்போமே, அதில் ஒரு இரண்டு, மூன்று உருண்டை அவ்வளவுதான். இன்னும் சிறிது கொண்டாட்டம் என்றால் இந்த உருண்டைகளோடு கொஞ்சம் உருளைக் கிழங்கு மசித்து, கொஞ்சம் சிறிய வெங்காயம் சேர்த்து, பச்சை மிளகாயுடன் சாப்பிடுவதுதான் அவர்களுடைய ஸ்டார் ஹோட்டல் விருந்து.

நாள் முழுக்க ரிக்க்ஷா, கோதுமை உருண்டை, நடை பாதை வாழ்க்கை இதுதான் அவர்கள் வாழும் முறை. வம்பு, தும்பு கிடையாது. ஒரு கைலி, ஒரு முண்டா பனியன் இது இவர்களுடைய உடை. மிக கம்பீரமான ஆத்மாக்கள்.

ஒவ்வொரு முறை நான் கொல்கத்தா- பார்க் சர்க்கஸ் செல்லும் போதும் இவர்களுடன் எனது மதியத்தை செலவு செய்திருக்கிறேன். எல்லோருமே பங்களாதேஷ்-ல் இருந்து வந்த அகதிகள், அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தங்கள் வாழ்கை நடத்துவது ஒரு பாடம்.

நான் அவர்களுக்கு வாடிக்கையாளர் என்பதை விட, நண்பன் என்பதே சிறப்பு.

சலாம் கொல்கத்தா!

No comments:

Post a Comment